இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 4 July 2025 12:44 PM IST
பாமக கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பாமக கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். மேலும் அருள் எம்.எல்.ஏ. சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து மனு அளிக்க உள்ளார். பாமக சட்டப்பேரவைக்குழுத் தலைவர் ஜிகே மணி, அருள் கொறாடாவாக தொடர்வார் என்று அளித்திருக்கக்கூடிய கடிதத்தை சபாநாயகரை சந்தித்து நேரில் வழங்க உள்ளார்.
- 4 July 2025 12:06 PM IST
தவெக செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த விஜய்
தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேருக்கு நுழைவு அடையாள அட்டை அனுப்பப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கட்சியின் தலைவர் விஜய் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்தார். தற்போது விஜய் தலைமையில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. 2026 சட்டசபை தேர்தல், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்கிறார். தவெக சார்பில் மாவட்ட அளவில் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள், மக்கள் பிரச்சினை ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளன.
கூட்டம் முடிவில், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிட இருக்கிறார். செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து தவெகவின் அடுத்த கட்ட நகர்வு தொடங்க இருக்கிறது.
- 4 July 2025 12:01 PM IST
பாமக சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி மனு
அன்புமணியால் பாமகவில் இருந்து நீக்கப்பட்ட ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ. அருளை, பாமக கொறடா பதவியில் இருந்து நீக்க சட்டப்பேரவை செயலரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாமக எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மயிலம் சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் சட்டப்பேரவை செயலரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
- 4 July 2025 11:54 AM IST
புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணை 7-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
நீதிபதி குணசேகரன் இந்த மனுக்களின் விசாரணையை இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதன்படி, இந்த மனு நீதிபதி குணசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி தரப்பில் இடையீட்டு மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கேட்டதால், விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- 4 July 2025 11:53 AM IST
திருமணத்திற்கு முன்பு கட்டாய மருத்துவ பரிசோதனை மனு தள்ளுபடி
திருமணத்திற்கு முன்பு ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற பொதுநல மனுவை ஐகோர்ட்டு மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. "இது போன்ற சட்டங்கள் கொண்டுவருவதற்கு நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் உள்ளது. நீதிமன்றம் இவ்வாறெல்லாம் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது" என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- 4 July 2025 11:52 AM IST
சட்டசபை செயலரை சந்திக்கும் பாமக எம்.எல்.ஏ.க்கள்
ராமதாஸ் ஆதரவாளரான பாமக எம்.எல்.ஏ. அருள், அன்புமணியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவரின் கொறடா பொறுப்பை மாற்றக்கோரி சட்டசபை செயலரை சந்தித்து பாமக எம்.எல்.ஏ.க்கள் மனு அளிக்க உள்ளனர். பாமக எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மயிலம் சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் சட்டப்பேரவை செயலரை சந்திக்க உள்ளனர்.
- 4 July 2025 11:50 AM IST
துணை வேந்தர்கள் நியமனம்: மத்திய அரசு, கவர்னர் மாளிகை பதிலளிக்க நோட்டீஸ்
பல்கலை. துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை நீதிபதிகள் பி.வி.நரசிம்மா, ஆர்.மகாதேவன் அமர்வு இன்று விசாரித்த நிலையில், மத்திய அரசு, கவர்னர் மாளிகை, யு.ஜி.சி. மற்றும் எதிர்மனுதாரர்கள் அனைவரும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
- 4 July 2025 11:47 AM IST
நலிந்த தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிதி
சென்னை, ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் குடும்ப நல நிதி உதவியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
- 4 July 2025 11:43 AM IST
தவெக வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கள் கிழமை விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 4 July 2025 11:41 AM IST
நிகிதாவுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது உண்மை... ஆனால்... திருமாறன் பரபரப்பு பேட்டி
போலீசார் அடித்துக்கொன்ற திருப்புவனம் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு வெளியே வந்த தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பே நிகிதாவை எனக்கு தெரியும். நிகிதா 4 திருமணங்களை செய்து யாருடனும் வாழவில்லை. எனக்கும், நிகிதாவுக்கும் திருமணம் நடந்தது உண்மை. ஆனால், அன்றைய இரவு பால் பழம் சாப்பிட சென்றபோது அவர் சென்றுவிட்டார். மறுநாள் நாங்கள் அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது, தகராறு நடந்தது. எனக்கு முன்னால் 3 பேருடன் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த நிகிதாதான் என எனக்கு தெரிந்திருந்தால், நான் முதலிலேயே வந்திருப்பேன்.
என்று அவர் கூறினார்.
















