இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025
x
தினத்தந்தி 11 Aug 2025 9:27 AM IST (Updated: 12 Aug 2025 9:10 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 11 Aug 2025 3:00 PM IST

    மாலத்தீவில் நேரத்தை கழிக்கும் நேஹா ஷெட்டி...அவரது அடுத்த திரைப்படம் எது?

    சூப்பர் ஹிட் திரைப்படமான டிஜே தில்லுவில் 'ராதிகா' வேடத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நேஹா ஷெட்டி, கடைசியாக "கேங்க்ஸ் ஆப் கோதாவரி"யில் நடித்த அவர், தற்போது மாலத்தீவில் நேரத்தை கழித்து வருகிறார்.

    இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோகளும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. மேலும், அவரை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    "கேங்க்ஸ் ஆப் கோதாவரி"க்குப் பிறகு அவர் எந்த புதிய படங்களிலும் கையெழுத்திடாதநிலையில், அவரது அடுத்த படம் என்ன என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

  • 11 Aug 2025 2:01 PM IST

    டெல்லியில் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

    தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் 8 வாரங்களுக்குள் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? என்றும் டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்றும் நாடு முழுவதும் உள்ள தெரு நாய் பிரச்சினைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய நிலை உள்ளது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • 11 Aug 2025 1:57 PM IST

    பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம் உருவாக்கியவர்களின் சிலைகள் திறப்பு

    பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம் உருவாக்கியவர்களின் சிலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னாள் முதலமைச்சர் காமராஜர், மறைந்த முன்னாள் மத்திய மந்திரி சி.சுப்பிரமணியம், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மற்றும் பழனிசாமி கவுண்டர் ஆகியோரின் சிலைகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து பரம்பிக்குளம், ஆழியாறு அணை கட்டுமான பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் வி.கே.பழனிசாமி அரங்கத்தினை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பணிகள் தொடர்பான புகைப்பட கண்காட்சி மற்றும் திட்டத்தின் மாதிரி வடிவத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

  • 11 Aug 2025 1:51 PM IST

    தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் இயக்கப்படும் வழித் தடங்கள் வெளியீடு

    சென்னை பெரும்பாக்கத்தில் குளிர்சாதன மின்சாரப் பேருந்து சேவையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அதில் சிறிது தூரம் பயணம் செய்தார். இந்த நிலையில், சென்னையில் இன்று புதிதாக தொடங்கப்பட்ட 55 தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் இயக்கப்படும் வழித் தடங்களை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

     

  • 11 Aug 2025 1:46 PM IST

    சூதாட்ட வழக்கு - நடிகர் ராணா ஆஜர்

    ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கில் நடிகர் ராணா அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். சமீபத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, நடிகை லெட்சுமி மஞ்சு ஆகியோர் அமலாக்கத்துறையிடம் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

  • 11 Aug 2025 1:42 PM IST

    பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு நாளையுடன் முடிவடைகிறது

    பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நாளை மாலை 5 மணி உடன் முடிவடைகிறது.

  • 11 Aug 2025 1:42 PM IST

    தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.- சென்னை வானிலை மையம்

  • 11 Aug 2025 1:41 PM IST

    போதையில்லா தமிழ்நாடு அமைய வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    “தன்னிலை மறக்கச் செய்து - தன்மானத்தை இழக்கச் செய்து வாழ்வை நாசமாக்கும் போதை பொருட்களைத் தவிர்ப்போம் என மாணவச் சமுதாயம் எடுத்துள்ள உறுதிமொழியை, ஒவ்வொருவரும் கடைப்பிடித்திட வேண்டும்! போதையில்லாத் தமிழ்நாடு அமைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

  • 11 Aug 2025 12:25 PM IST

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் சிலை சிட்னியில் மீட்பு

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கருவறையின் வெளிப்புறச் சுவரில் அர்த்தநாரீஸ்வரர் சிலை பதிக்கப்பட்டிருந்தது. இந்த சிலையில் சேதம் உள்ளதாகக் கூறி 2002 ஆம் ஆண்டு அகற்றப்பட்டதை அடுத்து மாயமான நிலையில், சிட்னியில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story