இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 Aug 2025 1:26 PM IST
துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி அறிவிப்பு
எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி சார்பில் போட்டி வேட்பாளராக முன்னாள் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி சுதர்ஷன் ரெட்டி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில், “அகில இந்திய கூட்டணி கட்சிகள் ஒரு பொதுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன, இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே பெயருக்கு ஒப்புக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது ஜனநாயகத்திற்கு ஒரு பெரிய சாதனை" என்று தெரிவித்தார்.
மேலும் நாளை மறுநாள் சுதர்ஷன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டுள்ளது.
- 19 Aug 2025 1:25 PM IST
படமாகும் முரளி நாயக்கின் வாழ்க்கை வரலாறு
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் (22) வீரமரணம் அடைந்தார்.
இப்போது முரளியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது. பிக் பாஸ் புகழ் கவுதம் கிருஷ்ணா இதில் முரளி நாயக்காக நடிக்கிறார். கே. சுரேஷ் பாபு இந்த படத்தை விஷான் பிலிம் பேக்டரியின் கீழ் தயாரிக்கிறார்
- 19 Aug 2025 12:52 PM IST
டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் மத்திய மந்திரியும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி பாலு உடல்நலக்குறைவால் காலமானார்.
மறைந்த ரேணுகா தேவியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
- 19 Aug 2025 12:50 PM IST
உலக புகைப்பட தினம்: புகைப்பட கலைஞர்களை போட்டோ எடுத்து அசத்திய மு.க.ஸ்டாலின்
உலக புகைப்பட தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் உள்ள பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- 19 Aug 2025 12:49 PM IST
செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படும் அன்புமணி? - பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று ஆலோசனை
பாமக நிறுவனர் ராமதாஸ் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கைக்கு, 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டும் பாமக தலைவர் அன்புமணி தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பாமக தலைவர் அன்புமணி பதிலளிக்காத நிலையில், செயல்தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவது தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் குறித்து தைலாபுரத்தில் இன்று பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 19 Aug 2025 12:15 PM IST
ஆட்சேபகரமான காட்சிகள் - ''மனுஷி'' படத்தை பார்க்க நீதிபதி முடிவு
இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ள ''மனுஷி'' படத்தை வருகிற 24-ந்தேதி பார்க்க போவதாக ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
- 19 Aug 2025 12:02 PM IST
எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்த உத்தரவுக்குத் தடை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்காலத் தடை விதித்தது.
பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தநிலையில், சென்னை உரிமையியல் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்திருந்தார்.
- 19 Aug 2025 11:59 AM IST
காக்கும் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
காக்கும் கரங்கள் திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்
முன்னாள் ராணுவ வீரர்களை தொழில்முனைவோராக மாற்றும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
காக்கும் கரங்கள் திட்டம் மூலம் 30 சதவீத மானியத்துடன் ரூ.1 கோடி வரை வங்கிக்கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- 19 Aug 2025 11:54 AM IST
கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரெயில் வழித்தடம் - அனுமதி வழங்கியது தமிழ்நாடு அரசு
கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்தப் பாதையில் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை தொடங்குவதற்கு ரூ.2,442 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 21.70 கி.மீ தொலைவிற்கு புதிய மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது
- 19 Aug 2025 11:50 AM IST
துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?
ஆளுங்கட்சியான பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மராட்டிய மாநில கவர்னரும். தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சியான 'இந்தியா' கூட்டணி சார்பில் வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் வரும் 21-ந் தேதி நிறைவடைய இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (புதன்கிழமை) தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார்.
















