இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 25 Jan 2025 3:15 PM IST
இஸ்ரேலிய பணய கைதிகள் மேலும் 4 பேரை விடுதலை செய்த ஹமாஸ்
இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 4 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஏற்கனவே 3 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
- 25 Jan 2025 3:12 PM IST
கவர்னரில் தேநீர் விருந்து: தமிழக அரசு புறக்கணிப்பு
குடியரசு தின விழாவையொட்டி நாளை கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுகிறது. இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
- 25 Jan 2025 2:13 PM IST
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பா.? - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்
வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் (25-01-2025) நாளையும் (26-01-2025) வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 25 Jan 2025 1:50 PM IST
வேங்கைவயல் விவகாரம்: தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்
வேங்கைவயல் விவகாரத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இதுகுறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- 25 Jan 2025 1:41 PM IST
உத்தர பிரதேசம்: 5 பேரை கொன்ற வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
மீரட் பகுதியில் ஜமீல் ஹூசைன் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி இன்று காலை போலீசார் ஜமீல் ஹுசைனின் இருப்பிடத்தை நெருங்கியபோது, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது.
அப்போது போலீசார் நடத்திய என்கவுன்டரில் ஜமீல் ஹூசைன் சுட்டுக்கொல்லப்பட்டார் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் மற்றும் சொத்து விவகாரத்தில் குடும்பத்திற்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஜமீல் ஹுசைன் தனது உறவினர்களான 5 பேரை கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- 25 Jan 2025 1:38 PM IST
2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் டி20 கிரிக்கெட் அணி; 3 இந்திய வீராங்கனைகளுக்கு இடம்
கடந்த ஆண்டின் (2024) சிறந்த மகளிர் டி20 போட்டிக்கான அணியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 3 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். அதன்படி நட்சத்திர பேட்டர் ஸ்மிருதி மந்தனா, ஆல்- ரவுண்டர் தீப்தி ஷர்மா மற்றும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்த அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
- 25 Jan 2025 1:31 PM IST
வெள்ளை மாளிகையின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளி நியமனம் - டிரம்ப் அறிவிப்பு
வெள்ளை மாளிகையின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை நியமித்து ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, வெள்ளை மாளிகையின் ஊடக துணை செயலாளராக இந்திய வம்சாவளி முன்னாள் பத்திரிகையாளர் குஷ் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
- 25 Jan 2025 1:22 PM IST
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: பாராட்டு விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சரை அழைத்த கிராம மக்கள்
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மதுரை அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் நன்றி தெரிவித்துக்கொண்டனர். மேலும் அரிட்டாபட்டி, வெள்ளாளபட்டி பகுதியில் நாளை (ஜன. 26ம் தேதி) நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள முதல்-அமைச்சருக்கு அழைப்பு விடுத்தனர்.













