இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 9 April 2025 12:39 PM IST
பட்டாசு ஆலைகளில் 1,477 ஆய்வு: தொழிலாளர் நலத்துறை
2023-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-ம் ஆண்டில் பட்டாசு ஆலை விபத்துகள் 40.74 சதவிகிதம் குறைந்துள்ளன. 2024-25 ஆண்டில் பட்டாசு ஆலைகளில் 1,477 ஆய்வுகள் மேற்கொண்டு 784 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.1.37 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 9 April 2025 12:00 PM IST
தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்கள் இயக்கம்
தமிழ் புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தி, வார இறுதி நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்திலிருந்து இன்று (09.04.2025) 190 பஸ்களும், வெள்ளிக்கிழமை அன்று (11.04.2025), 525 பஸ்களும், சனிக்கிழமை அன்று 380 பஸ்களும் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் கோயம்பேட்டிலிருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- 9 April 2025 11:53 AM IST
புதுச்சேரியில் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருவோர், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு, நிரந்த ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் புதுச்சேரியில் அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- 9 April 2025 11:52 AM IST
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளி - தள்ளுமுள்ளு
வக்பு சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வக்பு சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 3-வது நாளாக அமளியில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது
- 9 April 2025 11:46 AM IST
வழக்குகளின் காலதாமதத்தை தவிர்க்க விழிப்புணர்வு
நீதிமன்றங்களில் வழக்குகளின் காலதாமதத்தைத் தவிர்க்க மத்தியஸ்தம் மற்றும் சமரசம் மூலம் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகம் செய்தனர்.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், சமரசக் குழுவின் தலைவருமான எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில், நீதிபதிகள் அனிதா சுமத், ஜி.கே.இளந்திரையன், டி.பரத சக்கரவர்த்தி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உள்ளிட்ட நீதிபதிகள் இதில் பங்கேற்றனர்.
- 9 April 2025 11:36 AM IST
ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியது ஏன் என்பது குறித்து ரஜினி வீடியோ வெளியிட்டு விளக்கம் தெரிவித்திருக்கிறார்.
- 9 April 2025 11:00 AM IST
குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆறுதல் கூறினார்.
- 9 April 2025 10:57 AM IST
நீட் விலக்கு குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
- 9 April 2025 10:34 AM IST
பாஜகவில் இணைந்தார் கேதர் ஜாதவ்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ், பாஜகவில் இணைந்தார். மராட்டிய மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில், கட்சியில் இணைந்த கேதர் ஜாதவ், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இளைஞர்களை சந்தித்து பாஜகவின் விளையாட்டுப் பிரிவை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
- 9 April 2025 10:19 AM IST
குமரி அனந்தன் உடலுக்கு முதல்- அமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது மகளான தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆறுதல் கூறினார்.