இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Oct 2025 4:56 PM IST
தீபாவளியை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை
தீபாவளியை முன்னிட்டு முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க பட உள்ளது. பயனாளிகளின் விரல் ரேகை பதிவு தோல்வி அடைந்தாலும் கையொப்பம் பெற்று வேட்டி, சேலை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- 10 Oct 2025 4:12 PM IST
அக்.16-ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அக்டோபர் மாதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. அக்.16-ல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. தென்மேற்கு பருவ மழை வடதமிழகத்தில் தீவிரமாக இருந்தது. வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையில் மிக லேசான மழை காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது என்றார்.
- 10 Oct 2025 3:02 PM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரும் வழக்கு தொடர்பாக மாநில அதிகாரிகளின் விசாரணையில் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை இல்லை என கரூர் கூட்ட நெரிசலில் பலியான சிறுவனின் தந்தை பிரபாகரன் தரப்பில் வாதத்தை முன் வைத்தார்.
மேலும் நெரிசல் ஏற்படும் என்று திமுக உறுப்பினர் ஒருவர் முன்பே பதிவிட்டிருந்தார். கூட்டத்தில் நெரிசல் ஏற்படும் என்ற 3.15 மணியளவில் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். பதிவிட்டவர் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர். மகனின் இறுதிச்சடங்கு நடந்த நேரத்தில் எப்படி நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்? என் மகனை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அந்த இடத்தில் எதுவும் செய்யவில்லை. விஜய் கூட்டத்தில் ரவுடிகள் புகுந்துவிட்டனர் என சிறுவனின் தந்தை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுத் தரப்பு வாதம்: உயிரிழந்த சிறுவனுடைய தந்தையின் வலி எங்களுக்குப் புரிகிறது.
அதே வேளையில் இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும், தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணைக் குழு அதிகாரியை நியமிக்கவில்லை. மாறாக சென்னை ஐகோர்ட்டு தான் நியமித்தது.அஸ்ரா கர்க் என்ற மூத்த அதிகாரிதான் சிறப்பு விசாரணைக் குழுவினுடைய அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.இந்த அதிகாரி சி.பி.ஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளில் பணியாற்றியவர். சிறந்த அதிகாரியாக இருந்து கொண்டிருக்கின்றார். எனவே இவருடைய விசாரணையே தொடரலாம். சிபிஐ விசாரணை தேவையில்லை
அரிய வழக்குகளை மட்டுமே சூழ்நிலைக்கேற்ப பரிந்துரைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு உள்ளது. பல வழக்குகளை தொடர்ச்சியாக சிபிஐக்கு மாற்றி கொண்டிருந்தால் வழக்குகள் குவிந்து கிடக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- 10 Oct 2025 2:49 PM IST
தாலிபான் அரசுடன் அதிகாரப்பூர்வமாக உறவை ஏற்படுத்தியது இந்தியா
டெல்லியில் தாலிபான் வெளியுறவுத்துறை மந்திரி அமீர்கான் முத்தாகி மற்றும் இந்திய வெளியுறவுதுறை மந்திரி ஜெய்சங்கர் இடையேயான சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை மீண்டும் திறக்க உள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.தாலிபான் அரசை இந்தியா இதுவரை அங்கீகரிக்காத நிலையில், அதிகாரப்பூர்வமாக உறவை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.
- 10 Oct 2025 2:46 PM IST
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல்அமைதிப் பரிசை வழங்க நோர்வே நோபல் குழு அறிவித்துள்ளது.
லத்தீன் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த வெனிசுலா பெண் போராளி மரியா கொரினா மச்சாடோ. வெனிசூலாவில் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடியவர். 2012ல் வெனிசூலா அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
- 10 Oct 2025 1:44 PM IST
தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் அளவினை பொருத்தும், சாத்தனூர் அணைக்கு மேலே உள்ள அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவை பொருத்தும் சாத்தனூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்பதால், தென்பெண்ணை ஆற்றின் இருகரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது என நீர்வளத்துறையின் மூலம் எச்சரிக்கை விடப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- 10 Oct 2025 1:39 PM IST
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்படாது - ஐகோர்ட்டு உத்தரவு
நாளை மறுநாள் திட்டப்படி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- 10 Oct 2025 1:38 PM IST
பீகார் தேர்தல்: தேஜஸ்வி யாதவை முதல்-மந்திரி வேட்பாளராக முன்னிறுத்த இந்தியா கூட்டணி திட்டம்
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் நிதிஷ்குமார்தான் என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார்.
- 10 Oct 2025 1:36 PM IST
சிறுநீரக முறைகேடு வழக்கு: தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்டு
சிறுநீரக முறைகேடு வழக்கில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
- 10 Oct 2025 1:26 PM IST
நெல்லையில் உள்ள சாலைக்கு தமிழறிஞர் தொ.பரமசிவன் பெயர் வைக்க முடிவு
ஹைகிரவுண்ட் வடக்கு சாலைக்கு மறைந்த தமிழறிஞர் தொ.பரமசிவன் பெயரை சூட்ட நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாலை பெயர் மாற்றத்திற்கு தமிழ்நாடு அரசின் அனுமதியை பெற்றுள்ளதாக மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
















