இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 Jun 2025 2:13 PM IST
வெளியானது நீட் தேர்வு 2025 முடிவுகள்: தேசிய அளவில் முதலிடம் யார்..? - முழு விபரம்
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்-யூஜி 2025' தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டது. மாணவர்கள் இந்த விடைக்குறிப்பின் மீது தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்தது.
மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளைப் பரிசீலித்த பிறகு, இறுதி விடைக்குறிப்பு (பைனல் ஆன்ஷர் கீ) தயாரிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளும், தகுதிப் பட்டியலும் வெளியிடப்படும்.
இந்நிலையில், நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
- 14 Jun 2025 1:03 PM IST
திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு. சக்கரபாணி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கனிமொழி, ஆ.ராசா, செந்தில்பாலாஜி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
- 14 Jun 2025 12:59 PM IST
ஆமதாபாத் விமான விபத்து - இந்திய மருத்துவ சங்கம் கடிதம்
ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் குடும்பத்திற்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தி டாடா சன்ஸ் தலைவருக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதி உள்ளது.
விபத்தில் காயம் அடைந்த மருத்துவ மாணவர்களுக்கு டாடா குழுமம் நிதியுதவி வழங்க என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- 14 Jun 2025 12:56 PM IST
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் நொறுக்கப்பட்ட காவல் நிலையத்தை பார்வையிட செல்ல முயன்றபோது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆர்.பி.உதயகுமார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.
- 14 Jun 2025 12:34 PM IST
19ம் தேதி விண்வெளி ஆய்வு மையம் செல்கிறார் சுபான்ஷு சுக்லா
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஹு சுக்லா உள்பட 4 பேர் குழு வரும் 19ம் தேதி விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி பால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்ஸிஜன் கசிவை ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுதொடர்பான சமீபத்திய செய்திக்குறிப்பில், ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் உடனான சந்திப்பின் போது, பால்கன் 9 ஏவுதளத்தில் உள்ள சிக்கல் திறம்பட தீர்க்கப்பட்டுள்ளதாக குழுக்கள் தெளிவுபடுத்தியதாக இஸ்ரோ உறுதிப்படுத்தியது.
- 14 Jun 2025 12:10 PM IST
விமான பாதுகாப்பு - மத்திய மந்திரி ராம் மோகன் நாயுடு ஆலோசனை
ஏர் இந்தியா விபத்து எதிரொலியாக விமான பாதுகாப்பு தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு ஆலோசனை நடத்தினார்.
சிவில் விமான போக்குவரத்து செயலாளர், விமான நிலைய ஆணைய அதிகாரிகள் அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
- 14 Jun 2025 11:32 AM IST
கோவையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை.. தப்பிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
கோவையில் இருந்து தங்கத்துடன் கேரளா சென்ற தங்க நகை வியாபாரிகள் ஜெய்சன், ஜேக்கப் ஆகியோரிடம் மர்ம கும்பல் ஒன்று கொள்ளையடுத்து சென்றது.
முன்னதாக இருவரும் காரில் சென்ற போது மற்றொரு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கவுண்டன்சாவடி அருகே வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நகைகளை கொள்ளையடித்து தப்பிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- 14 Jun 2025 11:29 AM IST
கர்நாடகாவில் 16ம்தேதி முதல் அனைத்து வகையான பைக் டாக்சிகளுக்கு தடை
நாளை மறுநாள் முதல் கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சி சேவை நிறுத்தப்பட உள்ளது. மேலும் கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரிய சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை பைக் டாக்சிக்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- 14 Jun 2025 11:25 AM IST
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14 Jun 2025 11:05 AM IST
கோவை விமானநிலையம்: பெண் பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் சோதனையின் போது பெண்ணின் உடமைகளில் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு விமானத்தில், பெண் பயணி சரளா ராமகிருஷ்ணன் என்பவரின் உடமைகளிலிருந்து 9mm வகை தோட்டா பறிமுதல் செய்யப்பட்டநிலையில், அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
















