இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 15 Nov 2025 5:22 PM IST
மோசமான தோல்வி.. பீகார் தேர்தல் குறித்து கார்கே, ராகுல்காந்தி ஆலோசனை
”பீகார் தேர்தல் முடிவு நம் அனைவருக்கும் நம்பமுடியாதது. இது காங்கிரசுக்கு மட்டுமல்ல. முழு பீகார் மக்களும் இதை நம்பவில்லை. எங்கள் கூட்டணி கட்டியினரும் கூட இதை நம்பவில்லை. நாங்கள் அவர்கள் அனைவருடனும் விவாதித்தோம். அவர்கள் அதை நம்பவில்லை. ஏனென்றால், ஒரு அரசியல் கட்சிக்கு 90 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றி விகிதம். இது இந்திய வரலாற்றில் நடக்கவில்லை. நாங்கள் முழுமையாக ஆய்வு செய்கிறோம். பீகார் முழுவதும் தரவுகளை சேகரித்து வருகிறோம். ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள், உண்மையை வெளியிடுவோம்.”
- 15 Nov 2025 4:49 PM IST
எஸ்.ஐ.ஆர். விவகாரம்.. “ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்” - விஜய் பரபரப்பு வீடியோ
எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் குழப்பங்கள் உள்ளன. ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும். வரும் தேர்தலில் நாம் யார் என காட்ட வேண்டும். அந்த பலமான ஆயுதம் ஓட்டு, வாக்கு, ஜனநாயகம். அது இருந்தால்தான் நாம் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்.” என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.
- 15 Nov 2025 4:47 PM IST
தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரூ.1720 கோடி முதலீடு - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
“தமிழ்நாட்டில் ரூ.1,720 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த Hwaseung Enterprise நிறுவனம் இப்போது அதை ரத்து செய்து விட்டு, ஆந்திராவில் தொழிற்சாலை அமைக்க முதலீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிவதாக தி.மு.க. அரசு நடத்தி வந்த பொய்பரப்புரையின் முகமூடி இதன் மூலம் கிழிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் Hwaseung Enterprise நிறுவனம் கையெழுத்திட்டிருந்தது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த சில மாதங்களில் இந்த நிறுவனம் தமிழ்நாட்டை புறக்கணித்துவிட்டு ஆந்திராவுக்கு சென்றுள்ளது.
- 15 Nov 2025 4:42 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது
சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தாய்லாந்தில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது பயணி ஒருவரின் உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டு கடத்தி வரப்பட்ட 3.03 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.1.06 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போதைப்பொருளை கடந்த வந்த பயணியை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 15 Nov 2025 4:30 PM IST
'டியர் காம்ரேட்' முதல் 'லியோ' வரை - சாய் பல்லவி நிராகரித்த படங்கள்
"லியோ" (Leo) - விஜய், திரிஷா
"டியர் காம்ரேட்" (Dear Comrade) - விஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா மந்தனா
"கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" (Kannum Kannum Kollaiyadithaal) - துல்கர் சல்மான், ரிது வர்மா
"சர்க்காரு வாரி பாட" (Sarkaru Vaari Paata) - மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ்
"காற்று வெளியிடை" (Kaatru Veliyidai) - கார்த்தி, அதிதி ராவ்
- 15 Nov 2025 3:54 PM IST
13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், திருப்பூர், கோவை, கடலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 15 Nov 2025 3:50 PM IST
2026 தேர்தலில் தி.மு.க - த.வெ.க இடையேதான் போட்டி இருக்கும் - டிடிவி தினகரன்
எஸ்.ஐ.ஆர். குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. எங்களோடு சில கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கூட்டணி குறித்து நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. 2026 தேர்தலில் தி.மு.க - த.வெ.க இடையேதான் கடுமையான போட்டி இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
பழனிசாமி எங்களுக்கு துரோகம் செய்துள்ளார். எனவே, எங்களை சந்திக்க அவர் தயங்குவார். எங்கள் நிலைப்பாடு. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக இருக்கும் கூட்டணிக்கு நாங்கள் செல்ல மாட்டோம்.
- 15 Nov 2025 3:47 PM IST
டெல்லி கார் வெடிப்பு வழக்கு; பஞ்சாப்பில் அறுவை சிகிச்சை டாக்டர் கைது
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி டாக்டர் உமர் உன் நபி டெல்லிக்குள் நுழையும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்ததுடன், அவருடைய டி.என்.ஏ. பரிசோதனை முடிவில் காரை ஓட்டி வந்தது உமர் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
அரியானாவின் பரீதாபாத்தில் உள்ள அல்-பலா பல்கலைக்கழகத்தில் வேலை செய்துள்ளார். இந்த வழக்கில் அரியானாவின் நூ மாவட்டத்தில் 2 டாக்டர்களை விசாரணைக்காக போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களில் ஒருவர் அல்-பலா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர். மற்றொருவர் இந்த பல்கலைக்கழகத்தில் பயிற்சி டாக்டராக இருந்துள்ளார்.
- 15 Nov 2025 2:54 PM IST
"காந்தா" படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் நேற்று வெளியான படம் 'காந்தா'. இப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிலர் கலவையான விமர்சனங்களையும் கூறியுள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூலை படக்குழு அறிவித்துள்ளது.
- 15 Nov 2025 2:42 PM IST
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
15-11-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16-11-2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
17-11-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
















