இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 18 Jun 2025 8:07 PM IST
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, சாலையோரங்களில் நடப்படும் கொடி கம்பங்களுக்கு தலா ரூ.1,000 கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் கொடி கம்பங்கள் அமைக்க கூடாது என்றும் உத்தரவிட்டார்.
அதனுடன், அரசு இடங்களில் நடத்தப்படும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும், ஜூலை 2-ந்தேதிக்குள் ஐகோர்ட்டு உத்தரவை நடைமுறைக்கு கொண்டு வராத மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்து, வழக்கின் விசாரணையை ஜூலை 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
- 18 Jun 2025 7:59 PM IST
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஒரே மாதத்தில் 3 டன் அளவிலான ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது என ஆர்.பி.எப் தெரிவித்து உள்ளது.
- 18 Jun 2025 7:54 PM IST
2025-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழில் இந்த ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது, 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
- 18 Jun 2025 7:51 PM IST
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 18 Jun 2025 7:20 PM IST
ஒடிசாவில், காதலனுடன் கடற்கரையோரம் பேசி கொண்டிருந்த 20 வயது இளம்பெண் ஒருவர், 4 சிறார்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இதுபற்றி பேசிய பிஜு ஜனதா தள பெண் தலைவரான லேகாஸ்ரீ சமந்த்சிங்கார் கூறும்போது, ஒடிசாவில் பா.ஜ.க. அதிகாரத்திற்கு வந்த பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஓராண்டில், ஒடிசாவில் பலாத்கார சம்பவங்கள் 8 சதவீதம் அதிகரித்துள்ளன என கூறியுள்ளார்.
- 18 Jun 2025 6:14 PM IST
ஜூஸ் கடைகள், உணவு விடுதிகள், இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்த கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது. அவற்றுக்கு பதிலாக பேப்பர் ஸ்டிரா அல்லது சில்வர் ஸ்டிராக்களை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 18 Jun 2025 5:57 PM IST
சிலம்பு எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரெயிலில் கூடுதல் பெட்டிகள்
தாம்பரம் - செங்கோட்டை இடையேயான சிலம்பு எக்ஸ்பிரஸ் அதிவேக ரெயிலில் ஜூன் 20 முதல் 28ம் தேதி வரை கூடுதல் பெட்டிகள்' இணைக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி, இரண்டடுக்கு ஏசி பெட்டி 1, மூன்றடுக்கு ஏசி பெட்டி 2, படுக்கை வசதி பெட்டி 3, பொது படுக்கை பெட்டி 1 சேர்க்கப்பட்டு உள்ளது.
- 18 Jun 2025 5:18 PM IST
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 18 Jun 2025 5:05 PM IST
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள பேகம்பட் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என இன்று காலை மெயில் ஒன்று வந்துள்ளது.
எனினும், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு குழுவினரின் நீண்ட தேடுதல் வேட்டையில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 18 Jun 2025 5:03 PM IST
சென்னை மேற்கு மாம்பலத்தில் செயல்பட்டு வந்த நகைக்கடையில் வட்டியில்லா நகைக்கடன் தருவதாக கூறி வாடிக்கையாளர்கள் பலரிடம் பணமோசடி நடைபெற்றுள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு வளாகம் முன்பு ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.