இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Aug 2025 10:52 AM IST
"மார்ஷல்" படத்தில் வில்லனாக மிரட்ட வரும் ஆதி
நடிகர் கார்த்தி தற்போது 'வா வாத்தியார்', 'சர்தார்-2' படங்களில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி-2' படத்தில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தமிழ் இயக்கி வரும் 'மார்ஷல்' என்ற படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். படத்தின் முக்கிய காட்சிகள் கடலோர மாவட்டங்களில் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
- 23 Aug 2025 10:50 AM IST
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமனம்; டிரம்ப் அறிவிப்பு
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பதவி வகித்தவர் எரிக் கார்செட்டி. கடந்த 2023-ம் ஆண்டு மே முதல் 2025-ம் ஆண்டு ஜனவரி வரை இந்த பதவியில் அவர் நீடித்த நிலையில், அந்த பதவிக்கு புதிதாக ஒருவரை டிரம்ப் நியமித்து உள்ளார்.
இதன்படி, செர்ஜியோ கோர் என்பவரை ஜனாதிபதி டிரம்ப் இன்று நியமித்து உத்தரவிட்டு உள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி அதிகாரிகளுக்கான அலுவலகத்தின் இயக்குநராக அவர் பணியாற்றி வருகிறார்.
- 23 Aug 2025 10:46 AM IST
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்
சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் உயிரிழந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலையில் வேலைக்கு சென்ற நிலையில், கண்ணகி நகரில் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் வரலட்சுமி (30) உயிரிழந்தார்.
இந்த நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம் சார்பில் ரூ.10 லட்சமும், தனியார் நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 23 Aug 2025 10:44 AM IST
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி அளித்தனர்.
- 23 Aug 2025 10:43 AM IST
ஜார்கண்ட்: கனமழைக்கு 5 பேர் பலி; ஒருவர் மாயம்
ஜார்கண்டில் செராய்கேளா-கர்சவான் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதில், பல்வேறு இடங்களில் குடியிருப்புகள், வீடுகள் மற்றும் கட்டிடங்களை சுற்றி வெள்ளநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தண்டு கிராமத்தில் ராஜ்நகர் பகுதியில், சந்தோஷ் லோகர் என்பவர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் உள்பட சிலர் வந்துள்ளனர். அப்போது வீடு மழையால் சேதமடைந்து திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்தனர்.
- 23 Aug 2025 10:41 AM IST
தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு கப்பலில் 101 காற்றாலை இறக்கைகள் ஏற்றுமதி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் காற்றாலை இறக்கைகளை கையாளுவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காற்றாலை இறக்கைகளை கையாளுவதற்கு வசதியாக எந்திரங்கள், இடவசதி உள்ளிட்டவை இருப்பதால், ஆண்டுதோறும் வ.உ.சி. துறைமுகத்தில் காற்றாலை இறக்கைகள் கையாளுவது அதிகரித்து வருகிறது.
- 23 Aug 2025 10:40 AM IST
வைணவத் திருக்கோவில்களுக்கு கட்டணமில்லா பயணத்துக்கு பக்தர்கள் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, 2025-2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் திருக்கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் தொடங்க இருக்கும் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
- 23 Aug 2025 10:36 AM IST
சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும்.. வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை தொடரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 23 Aug 2025 10:35 AM IST
அதிகரிக்கும் தங்கம் விலை.. வரலாறு காணாத புதிய உச்சத்தில் வெள்ளி விலை - இன்றைய நிலவரம் என்ன?
இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,315க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.74,520 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 130க்கும். ஒரு கிலோ வெள்ளி 1,30,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- 23 Aug 2025 10:17 AM IST
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்: தமிழக அரசுக்கு சித்தராமையா கோரிக்கை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், இப்போதே தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணைகட்டுவதன் மூலமாக 177.25 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க முடியாமல் போகுமா?.
அப்படி இருந்தும் மேகதாதுவில் அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அது எதற்கு என்று தெரியவில்லை. மேகதாதுவில் அணைகட்டுவதால் தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டுக்கு அதிக தண்ணீர் நிச்சயமாக செல்லும். அதனால் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என தமிழ்நாட்டு அரசிடம் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறினார்.
















