இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Aug 2025 1:21 PM IST
சென்னையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது. மேலும் அ.தி.மு.க. கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- 26 Aug 2025 1:17 PM IST
அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி
வயிற்று வலி காரணமாக அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 26 Aug 2025 1:08 PM IST
சென்னை கால்நடை மருத்துவ பல்கலை. முறைகேடு: முதல்வர் சஸ்பெண்ட்
கால்நடை மருத்துவக்கல்லூரியில் ரூ.5 கோடி வரை முறைகேடு புகாரில் வேப்பேரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முறைகேடுகள் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளநிலையில், 15 நாட்களுக்குள் விசாரித்து அறிக்கை சமர்பிக்க பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 26 Aug 2025 12:39 PM IST
விடியல் எங்கே..? ஆவணம் வெளியிட்ட அன்புமணி
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மக்களுக்கு ஆசைகாட்டி அவர்களின் வாக்குகளை கைப்பற்றும் நோக்குடன் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. ஆனால், அந்த தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசு நிறைவேற்றவில்லை.
திமுக எத்தனை வாக்குறதிகளை அளித்தது? அவற்றில் நிறைவேற்றப்பட்டவை எவ்வளவு? நிறைவேற்றப்படாதவை எவ்வளவு? அரைகுறையாக நிறைவேற்றப்பட்டவை எவ்வளவு? என்பதை பட்டியலிடும் ஆவணம் தான் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தயாரித்து வெளியிடப்படும் 'விடியல் எங்கே?" என்ற தலைப்பிலான ஆவணம் ஆகும் என்று பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 26 Aug 2025 12:36 PM IST
விநாயகர் சதுர்த்தி: தோவாளை, மதுரை மலர் சந்தைகளில் பூக்களின் விலை உயர்வு
ஓணம் பண்டிகை தொடக்கம் மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.400-க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று ரூ.1,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதைபோல மல்லிகை, அருகம்புல், கேந்தி என அனைத்துப் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
- 26 Aug 2025 12:32 PM IST
மின்சாரக் காரை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி
ஆமதாபாத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சாரக் காரான 'e-VITARA'வை பிரதமர் மோடி கொடியசைத்து அறிமுகம் செய்து வைத்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் e-VITARA கார்கள், 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 2026 முதல் காலாண்டில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 26 Aug 2025 11:35 AM IST
டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்...சாதனை படைத்த ஷகிப் அல் ஹசன்
வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.
- 26 Aug 2025 11:30 AM IST
கோவை: 2 டன் எடையுள்ள ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு
சட்டவிரோதமாக கேரளாவிற்கு சேலத்திலிருந்து கோவை வழியே கொண்டு செல்லப்பட்ட, 2 டன் 15,000 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் இருந்து கோவை வழியே கேரள மாநிலம் மலப்புரத்திற்கு கடத்த முயற்சி நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 26 Aug 2025 11:25 AM IST
ஆம்பூர் கலவர வழக்கு: நாளை மறுதினம் தீர்ப்பு வழங்கப்படும் - திருப்பத்தூர் கோர்ட்டு அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 2015ம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் கைதான தமிழ் பாஷா என்பவர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட அது கலவரமாக மாறி, பேருந்துகள் உடைக்கப்பட்டு, போலீஸ் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன
இந்த கலவர வழக்கில் 191 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், மாவட்ட கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க இருந்தது. முன்னெச்சரிக்கையாக கோர்ட்டு வளாகம் முழுவதும் சுமார் 1,000 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு நாளை மறுதினம் (ஆக., 28-ம் தேதி ) வழங்கப்படும் என திருப்பத்தூர் கோர்ட்டு அறிவித்துள்ளது.
- 26 Aug 2025 11:17 AM IST
25 சதவீத கூடுதல் வரி நோட்டீஸ் பிறப்பித்த அமெரிக்கா; பிரதமர் மோடி கொடுத்த பதிலடி என்ன?
நுகர்வுக்காக அல்லது பண்டக சாலைக்கு அனுப்பப்படும் இந்தியப் பொருட்கள் மீது வரி அமல்படுத்தப்படும் என்றும், ரஷியாவால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாகவே கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் அந்த நோட்டீசில் அமெரிக்கா விளக்கம் அளித்தது.
















