இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 29 Sept 2025 5:55 PM IST
ஒரே நாளில் சவரன் தங்கத்தின் விலை ரூ.1,040 உயர்வு
ஒரே நாளில் சவரன் தங்கத்தின் விலை ரூ.1,040 உயர்ந்துள்ளது.
* 1 சவரன் - ரூ.86,160 விற்பனை செய்யபடுகிறது.
* 1 கிராம் - ரூ.10,770 விற்பனை செய்யபடுகிறது.
சவரனுக்கு காலையில் ரூ.480, மாலையில் ரூ.560 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
- 29 Sept 2025 5:48 PM IST
கரூர் சம்பவம் தொடர்பாக 25 பேர் மீது வழக்குப்பதிவு
கரூர் சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் கூட்ட நெரிசல் விபத்து குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 29 Sept 2025 4:52 PM IST
ஆசியக் கோப்பை சர்ச்சை - பிசிசிஐ தலைவர் கடும் கண்டனம்
ஆசியக் கோப்பையை இந்திய அணியிடம் தராதது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நவம்பரில் நடைபெறவுள்ள ஐசிசி மாநாட்டில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப் போவதாக கூறியுள்ளார்.
'ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ள பாக்., மந்திரி மோசின் நக்வியிடம் கோப்பை பெறக் கூடாது என இந்தியா முடிவு செய்துவிட்டது. அதனாலேயே, கோப்பையை தராமல் எடுத்துச் சென்றது நியாயமல்ல. கோப்பை, பதக்கங்களை இந்தியாவிடம் தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
- 29 Sept 2025 4:50 PM IST
சிறப்பு மின்சார ரெயில்கள்
ஆயுதப் பூஜையை ஒட்டி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக இன்று இரவு தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு இரு சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
- 29 Sept 2025 4:30 PM IST
தவெக ஆனந்த் கைது செய்யப்படுகிறாரா?
கரூரில் அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதை கண்டுகொள்லாமல் இருந்ததாக ஆனந்த் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபடுதல், பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களை முதலில் நேரில் அழைத்து விசாரிப்போம்.
நிர்வாகிகள் ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் ஆகியோரை விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு வராவிட்டால் கைது செய்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். விஜய் கைதாவாரா என்ற கேள்விக்கு விசாரணை ஆணைய அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருண்டார்.
- 29 Sept 2025 3:31 PM IST
யாரையும் குற்றம்சட்ட விரும்பவில்லை - நிர்மலா சீதாராமன்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
என்னையும், மத்திய இணை மந்திரி எல்.முருகனையும் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். அவர் வர விருப்பப்பட்டாலும், வர முடியாத சூழலால் எங்களை அனுப்பி வைத்துள்ளார். வேதனையை கூறி அழுபவர்களிடம் ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் கூறியதை பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தெரிவிப்பேன்.நான் இங்கே வந்தது மாநில அரசு என்ன செய்தது? விசாரணை ஆணையம் என்ன சொல்கிறது? என்று பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ அல்ல. கூட்ட நெரிசல் பாதிப்புகள் தொடர்பாக யாரையும் குற்றம்சாட்ட நான் விரும்பவில்லை. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்ததால் ஏற்பட்ட பாதிப்புதான் நெரிசல் என்றார்.
- 29 Sept 2025 2:21 PM IST
இன்று மாலை தவெக அலுவலகம் செல்கிறார் விஜய்
தற்போது பட்டினப்பாக்கம் இல்லத்தில் உள்ள தவெக தலைவர் விஜய், இன்று மாலை பனையூர் தவெக தலைமை அலுவலகம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் சம்பவத்திற்கு பின் முதல்முறையாக தவெக அலுவலகம் செல்லும் விஜய், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
- 29 Sept 2025 1:17 PM IST
''இதுவே கடைசியாக இருக்கட்டும்''...நடிகை மகிமா எச்சரிக்கை
இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் யூடியூப் சேனலிலும் தன்னை பற்றி அவதூறு பரப்பி வருவதாக நடிகை மகிமா தெரிவித்துள்ளார்.















