சிவகாசி அருகே சோகம்.. வீட்டின் சுவர் விழுந்து நர்சிங் மாணவி உயிரிழப்பு

சிவகாசி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து நர்சிங் மாணவி பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பழைய வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மகள் பவானி (வயது 17). இவர் சிவகாசியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி வீரமணி தனது மனைவி ராதாவுடன் சேர்ந்து தனது மண் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அந்த வீட்டின் வெளியே மாணவி பவானி அமர்ந்திருந்தார். அப்போது அந்த பகுதியில் பெய்த தொடர் மழையால் திடீரென வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து பவானி மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர் படுகாயம் அடைந்தார். அவரை பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பவானி பரிதாபமாக உயிரிழந்தார். இ்துகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மழையால் மண் சுவர் இடிந்து விழுந்து மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






