வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் - சென்னையில் நடைபெற்றது

ரிப்பன் கட்டிடக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை,
சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் ரிப்பன் கட்டிடக் கூட்டரங்கில் இன்று (31.10.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 மற்றும் 1951, வாக்காளர் பதிவு விதிகள் 1960, தேர்தல் நடத்துதல் விதிகள் 1961, உச்சநீதிமன்ற தீர்ப்புகள், இந்திய தேர்தல் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவுறுத்தல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான வலுவான மற்றும் வெளிப்படையான சட்ட கட்டமைப்பை நிறுவுவது குறித்தும், இந்திய தேர்தல் ஆணையத்தின் துாய்மையான வாக்காளர் பட்டியல்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கத்திற்காகவும் மேற்கொள்ளப்படவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision) மேற்கொள்வது குறித்து தேர்தல் ஆணையத்தின் அலுவலர்களால் பயற்சி வழங்கப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் முக்கிய செயல்முறைகளை தொடர்புடைய தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் / உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களைக் கொண்டு பணிகளை உடனடியாக தொடங்குதல் தற்போது உள்ள வாக்காளர்களுக்கு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி படிவத்தினை பூர்த்தி செய்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு வழங்குதல், இக்கணக்கெடுப்பு பணியின்போது புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோருபவர்களுக்கு படிவம் 6 மற்றும் அதற்கான உறுதிமொழி படிவத்தினை வழங்குதல், ஒவ்வொரு வாக்காளர்களின் வீட்டிற்கு குறைந்தது மூன்று முறை சென்று சரிப்பார்ப்பு பணிகளை மேற்கொள்ளுதல்,
மேலும், இறந்தவர்கள் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகியோர்களை இக்கணக்கெடுப்பின்போது கண்டறிதல், குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள் அல்லது தற்காலிக இடம் பெயர்ந்தவர்களையும் கணக்கெடுப்பு பணியின்போது கண்டறிந்து கணக்கெடுப்பு படிவத்தினை வழங்குதல், இக்கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO), வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் (BLA) கலந்தாய்வுக்கூட்டத்தை நடத்தி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் அட்டவணை மற்றும் செயல்முறைகளை விளக்கி பணிகளை மேற்கொள்ளுதல், இப்பணிகள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தியுள்ள கால அட்டவணைக்குள் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடித்தல் உள்ளிட்ட தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்களின் கண்காணிப்பில் இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






