திருச்சி: சாலையில் நடந்து சென்றபோது கடித்த தெருநாய் - 7 மாத கர்ப்பிணிக்கு சிகிச்சை

மணப்பாறை பகுதியில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் சமீப காலமாக தெருநாய்கள் பிரச்சினை அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்களை தெருநாய்கள் கடிப்பதாகவும், மேலும் நாய்களால் பல்வேறு விபத்து சம்பவங்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், திருச்சி மணப்பாறை தெற்கு லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சங்கவி என்ற 7 மாத கர்ப்பிணி பெண், இன்று சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று அவரது கால் மற்றும் கையில் கடித்து குதறியுள்ளது. அவரது சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நாயை விரட்டி அடித்தனர்.
பின்னர் காயமடைந்த கர்ப்பிணி பெண் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மணப்பாறை பகுதியில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பாக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






