திருச்சி: நர்சிங் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்

மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி,
தொட்டியத்தை சேர்ந்தவர் ஹரிஷ் (வயது 22). இவர் ஒரு நர்சிங் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியின் உறவினர் ஆவார். அந்த மாணவியை அவர் பார்க்க சென்றபோது, மாணவியின் தோழியான திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஹரியும், அந்த சிறுமியும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி அந்த சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற ஹரிஷ், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பலமுறை அந்த சிறுமியுடன் அவர் உல்லாசமாக இருந்ததில், அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து அந்த சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் சென்று விசாரணை நடத்தி, அந்த சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து சிறுமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிசை வலைவீசி தேடி வருகின்றனர்.






