விஜய் தலைமையில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது


விஜய் தலைமையில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
x

மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக சிறப்பு பொதுக்குழுவில் அக்கட்சித் தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.

சென்னை,

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் த.வெ.க. அன்றாட அரசியல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தியது. கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். முதலாவதாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அக்கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் எதுவும் பங்கேற்காமல் இருந்தார். எனவே அந்த சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் விஜய் சிறப்புரையாற்ற இருக்கிறார். அவருடைய அனல் தெறிக்கும் பேச்சு நிறைவடைந்ததும், அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட இருக்கிறது.

விஜய்யின் பேச்சை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்வதற்காக, அக்கட்சியினர் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அழைப்பு கடிதம் மற்றும் தலைமைக்கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழுவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக அடையாள அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், காலை 9.15 மணிக்குள் பொதுக்குழு அரங்கிற்குள் வந்துவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை கட்சி தலைமை பிறப்பித்திருந்தது.

1 More update

Next Story