போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது

தச்சநல்லூர் போலீஸ் நிலையம் உள்பட 4 இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
நெல்லை,
நெல்லை தச்சநல்லூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜவல்லிபுரத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 35) உள்பட 2 பேரை கைது செய்தனர். இதனை அறிந்த அருண்குமாரின் தம்பியான அஜித்குமார் (30) தனது கூட்டாளிகளுடன் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்று, தச்சநல்லூர் போலீஸ் நிலையம் உள்பட 4 இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரண் என்பவரை கைது செய்தனர். அதேபோல் தாழையூத்து போலீசார், அஜித்குமார், அவரது கூட்டாளி பெருமாள் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக அஜித்குமாரின் கூட்டாளிகளான ராஜவல்லிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணபெருமாள் (19), வல்லவன்கோட்டையை சேர்ந்த அருண் (22) ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அவர்கள் 2 பேரையும் தச்சநல்லூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைதானவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘‘போலீசாரை அச்சுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் போலீஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசினோம்’’ என்று கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.






