கட்டுக்கடங்காத கூட்டம்....சுற்றுப்பயண திட்டத்தை மாற்றிய விஜய்

பெரம்பலூர் சென்றபோது நள்ளிரவு நேரமானதால் விஜய் அங்கு பேசாமல் சென்றுவிட்டார்
சென்னை,
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், கடந்த 13ம் தேதி திருச்சியில் தனது பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். திருச்சியில் விஜய்யை வரவேற்க த.வெ.க. தொண்டர்கள் அதிக அளவில் குவிந்ததால், அங்கு விஜய் பேசுவதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது. தொண்டர்கள் சூழ்ந்ததால், சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தை அவர் கடந்து பிரசாரம் செய்வதற்கான இடத்திற்கு வர சுமார் 5 மணி நேரம் ஆனது.
தொடர்ந்து அரியலூரில் பேசிவிட்டு, குன்னம் பகுதியில் வாகனத்தின் மீது நின்று கையசைத்தபடி விஜய் சென்றார்.ஆனால் பெரம்பலூர் சென்றபோது நள்ளிரவு நேரமானதால் விஜய் அங்கு பேசாமல் சென்றுவிட்டார். இதனால் அங்கு அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்த த.வெ.க. தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு நாளில் 3 இடங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்த விஜய் , 2 இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்ய செய்தார்.
இந்த நிலையில் ஒரு நாளில் 2 மாவட்டங்களில் மட்டும் சுற்றுப்பயணம் செய்ய விஜய் முடிவு செய்துள்ளார். 20ம் தேதி நாகை, திருவாரூரில் மட்டும் விஜய் பிரசாரம் செய்வார் . அதன்படி மாற்றியமைக்கப்பட்ட புதிய சுற்றுப்பயண விவரங்கள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.






