‘விஜய்யின் அரசியல் வருகையை முதன்முதலில் வரவேற்றது வி.சி.க.தான்’ - திருமாவளவன்

வி.சி.க. இதுவரை தனிநபர் விமர்சனம் செய்ததில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
‘விஜய்யின் அரசியல் வருகையை முதன்முதலில் வரவேற்றது வி.சி.க.தான்’ - திருமாவளவன்
Published on

வேலூர்,

வேலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்த அச்சமும் இல்லை. விஜய்யின் அரசியல் வருகையை முதன்முதலில் வரவேற்று, வாழ்த்தியது வி.சி.க.தான். அவர் கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. பல நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார். ஆனால் அவர் இதுவரை கொள்கை சார்ந்த அரசியலை பேசாமல், வெறுப்பு அரசியலை மட்டுமே உயர்த்திப் பிடிக்கிறார்.

உடனடியாக ஆட்சியில் அமர்ந்து விட வேண்டும் என்ற வேட்கையோடு, ஆளுங்கட்சியை விமர்சிப்பது என்பதையும் தாண்டி வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் ஜனநாயக சக்திகள் பலரும் அவருக்கு அறிவுரை சொல்லக்கூடிய வகையிலும், வழிகாட்டும் வகையிலும் கருத்துகளை சொல்லி வருகிறார்கள்.

வி.சி.க. இதுவரை தனிநபர் விமர்சனம் செய்ததில்லை. த.வெ.க.வை கடுமையாக நாங்கள் விமர்சித்ததும் இல்லை. ஆனால் அவர்கள் முன்வைக்கும் அரசியலில் எங்களுக்கு விமர்சனம் இருக்கிறது. அவர்கள் முன்வைக்கும் அரசியல் கொள்கை சார்ந்த அரசியலாக இல்லாமல், ஆளுங்கட்சி மீது வெறுப்பை உமிழக்கூடிய அரசியலாக மட்டுமே இருக்கிறது என்பதை மட்டும்தான் நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com