மதுரை மேற்கு தொகுதியில் விஜய் போட்டி?

த.வெ.க. தலைவர் விஜய்க்கு முதல் தேர்தலாக 2026 தேர்தல் அமைந்து இருக்கிறது.
மதுரை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. கூட்டணி கணக்குகள் ஒருபுறம் சென்று கொண்டு இருக்கின்றன. மறுபுறம் பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகள் எவை? என்ற விவாதமும் நடந்து வருகின்றன.
ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு முதல் தேர்தலாக 2026 தேர்தல் அமைந்து இருக்கிறது. ஆங்கிலத்தில் அவரது பெயரின் முதல் எழுத்தான வி என்ற எழுத்தில் வரும் தொகுதியில்தான் அவர் முதல் தேர்தலை சந்திப்பார் என பேசப்பட்டது. அந்த வகையில் தென்மாவட்டங்களில் விருதுநகர் தொகுதியும் விவாதப்பொருளாக இருந்தது.
மதுரையில் வென்றால், அரசியல் களத்தில் ஒரு வரலாறாக பேசப்படும் என்பதால் அவர் மதுரையில் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது. சென்டிமென்ட் ஆக எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வென்ற மதுரை மேற்கு தொகுதியில் அவர் களம் இறங்க இருக்கிறார் என மதுரை த.வெ.க. நிர்வாகிகள் கூறும் நிலையில், அவர் மதுரை மேற்கில் போட்டியிட்டு 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி என தெரிவித்து அவரது கட்சியினர் போஸ்டர் அடித்து மதுரை முழுவதும் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் அதில், "மதுரை மேற்கு தொகுதியில் நடிகர் விஜய்யை வெற்றி பெற செய்து முதல்- அமைச்சராக்கிய மக்களுக்கு நன்றி நன்றி..." எனவும் எழுதப்பட்டுள்ளது. தற்போது மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளார். இவர் இந்த தொகுதியில் அடுத்தடுத்து 3 முறை வெற்றி பெற்றவர் ஆவார். 2026-ல் மீண்டும் அவர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க. அணியில் கடந்த முறை இந்த தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை தி.மு.க. வேட்பாளரை களம் இறக்க அத்தொகுதியின் பொறுப்பாளரான அமைச்சர் மூர்த்தி ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த முறை இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. ஒரு வேளை விஜய் இந்த ெதாகுதியில் போட்டியிட்டால் நாடு முழுவதும் கவனிக்கப்படும் தொகுதியாக மாறிவிடும்.






