விஜய் கொடுத்த ரூ.20 லட்சம்; வீணாக்கும் மருமகன்.. கதறி அழுத மாமியார்


விஜய் கொடுத்த ரூ.20 லட்சம்; வீணாக்கும் மருமகன்.. கதறி அழுத மாமியார்
x
தினத்தந்தி 4 Nov 2025 7:27 PM IST (Updated: 4 Nov 2025 7:33 PM IST)
t-max-icont-min-icon

இரண்டரை வயது மகளை மாமியாரிடம் இருந்து பறித்து கொண்டு சென்று விட்டார்.

கரூர்,

கரூரில் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி த.வெ.க. சார்பில் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ‘வீடியோ கால்’ மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார்.

இதில், உயிரிழந்த பெண் ஒருவரின் கணவர், ரூ.20 லட்சம் பணம் பெற்று கொண்டு அதனை வீணாக்கி வருகிறார் என அந்த பெண்ணின் தாயார் கண்ணீருடன் கூறினார். சுதா என்ற பெண்ணுக்கு 4 மகள்கள். அவருடைய 4 மகள்களில் 3-வது மகளான பிருந்தா என்ற அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியுள்ளன. ஆனால் கணவருடன் 2 ஆண்டுகளே வாழ்ந்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.

விஜய்யின் பிரசார கூட்டத்திற்கு சென்ற அந்த பெண்ணின் உயிரிழப்புக்கு பின்னர் அவருடைய உடலை பார்க்க கணவர் செல்லவில்லை. ஆனால், ரூ.20 லட்சம் பணம் அறிவிக்கப்பட்டதும், அரசு மருத்துவமனைக்கு சென்ற அந்த கணவர், பெண்ணின் உடலை தரும்படி மாமியாருடன் சண்டை போட்டுள்ளார். அதனுடன் இரண்டரை வயது மகளையும் மாமியாரிடம் இருந்து பறித்து கொண்டு சென்று விட்டார்.

அப்போது, அந்த மாமியார் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார். பேத்தியின் பெயரில் ரூ.20 லட்சம் பணம் போடும்படி கூறியுள்ளார். பணம் வரும் வரை அமைதியாக இருந்து விட்டு, தற்போது பேத்தி பெயரில் பணம் எல்லாம் போட முடியாது என மருமகன் கூறியுள்ளார். அதுபற்றி கேட்க போனால் தன்னை தாக்க வருகிறார் என்றும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது என்றும் பணம் பேத்திக்கு பயன்படாமல் வீணாகிறது என்றும் மருமகன் மீது பிருந்தாவின் தாயார் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கலெக்டரிடமும் மனு அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

1 More update

Next Story