விஜய் வருகிற 17-ந்தேதி கரூர் செல்ல திட்டம்?


விஜய் வருகிற 17-ந்தேதி கரூர் செல்ல திட்டம்?
x

தனியார் திருமண மண்டபத்தில் நிவாரணத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை பாதுகாப்பாக நடத்த த.வெ.க. சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கரூர்,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி நடந்த தமிழக வெற்றிக்கழக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினரை த.வெ.க. தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்த நிவாரண தொகையை வழங்குவதற்காக விஜய் விரைவில் கரூருக்கு வருகைதர உள்ளார். இதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு த.வெ.க. சார்பில் டி.ஜி.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்ற டி.ஜி.பி., இதுதொடர்பாக கரூர் போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து மனு அளித்து அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கும் நிவாரணத்தொகை வழங்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. தனியார் திருமண மண்டபத்தில் நிவாரணத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை பாதுகாப்பாக நடத்த த.வெ.க. சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடம், நேரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முடிவு செய்த பின்னர், கரூர் போலீஸ் சூப்பிரண்டிடம் த.வெ.க. நிர்வாகிகள் அனுமதி கேட்டு மனு அளிக்க உள்ளதாக தெரிகிறது. நிகழ்ச்சியை நடத்துவதற்காக த.வெ.க. சார்பில் கேட்கப்பட்ட மண்டபங்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சில மண்டபங்களின் உரிமையாளர்கள் வாடகைக்கு தர தயங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நிவாரணத்தொகை வழங்கும் நிகழ்ச்சியானது திட்டமிட்டபடி வருகிற 17-ந்தேதி நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

1 More update

Next Story