முதற்கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய் - தவெக தலைமை ஆலோசனை

2-வது மாநாட்டை நிறைவு செய்துள்ள த.வெ.க., 2026 தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி நகர தொடங்கி உள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் தமிழக அரசியல் களத்தில் தி.மு.க, அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி உறுதியாகியுள்ளது. பிரதான கட்சிகளாக உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களது தலைமையில் கூட்டணி அமைத்துள்ளது.
நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. விஜய் தலைமையிலான த.வெ.க.வும் கிட்டத்தட்ட தனித்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் எந்த அணியில் இணைவது என்று முடிவு செய்யவில்லை. ஜனவரிக்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்வதாக தே.மு.தி.க. ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இந்த சூழ்நிலையில் மதுரையில் 2-வது மாநாட்டை நிறைவு செய்துள்ள த.வெ.க. தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி நகர தொடங்கி உள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். த.வெ.க.வின் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக மாவட்ட செயலாளர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்ந்து விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்ட த.வெ.க. நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.
அப்போது விஜய் சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள், அதற்கான அனுமதி பெறுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண விவரம் குறித்த பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.






