விஜயகாந்த் ஏற்படுத்தியதைவிட விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார் - டி.டி.வி.தினகரன் பேட்டி

2006 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விட இந்த தேர்தலில் விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், கேம்ப் ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தாம்பரம் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட செயலாளர் கரிகாலன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் பேசினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
வருகிற டிசம்பர் மாதம் முதல் தேர்தலுக்கான எங்களது பிரசாரம் தொடங்கும். தி.மு.க. கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய் தலைமையில் ஒரு கூட்டணி, சீமான் தலைமையில் ஒரு கூட்டணி என 4 கூட்டணி வர இருக்கிறது. எங்களது கூட்டணி நிலைப்பாட்டை டிசம்பர் மாதம் தெரிவிப்போம். எனக்கும், பாஜகவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்ததை ஏற்று கொள்ள முடியாததால் கூட்டணியில் இருந்து வெளியில் வந்தோம்.
2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைவிட வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார். விஜயகாந்த் வருகையால் திமுகவும், அதிமுகவும் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
செங்கோட்டையனிடம் அடிக்கடி பேசுவேன். தேர்தல் முடிந்த பிறகு பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவிக்கு முடிவுரை எழுதப்பட்டு ஜெயலலிதாவின் தொண்டர்கள் பழைய அதிமுகவை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.






