கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பது தொடர்பாக விஜய் முக்கிய ஆலோசனை

த.வெ.க.வின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து விஜய் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை,
கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கரூர் மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். மேலும் த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாக இருந்தனர். கரூர் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. கட்சி நடவடிக்கைகள் அனைத்திலும் விஜய் உத்தரவின் பேரில் என். ஆனந்த் இரவுபகலாக ஈடுபட்டு த.வெ.க. தொண்டர்களை ஊக்கப்படுத்தி வந்தார்.
இந்நிலையில் அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் த.வெ.க. கட்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதையொட்டி கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 20 லட்சம் நிதி வழங்க திட்டமிட்டிருந்தார். கரூர் செல்வதற்கு முறைப்படி அனுமதி கேட்டு போலீசாரிடம் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் கரூர் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு குறித்து விஜய் ஆலோசனையின் பேரில் ஆதவ் அர்ஜூனா டெல்லியில் முகாமிட்டு மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் கமிஷனுக்கும் தடை விதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு த.வெ.க. தலைவர் விஜய் மட்டுமின்றி தொண்டர்கள் மத்தியிலும் புது உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு நேற்றிரவு கட்சி பொதுச் செயலாளர் என். ஆனந்த் கட்சி தலைவர் விஜயை சந்தித்து பேசியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு த.வெ.க.வுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பொதுச் செயலாளர் என். ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் இன்றும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்திப்பது மற்றும் த.வெ.க.வின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து விஜய் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதையொட்டி த.வெ.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்துடன் அரசியல் பணிகளில் இன்று காலை முதல் களமிறங்கத் தொடங்கி உள்ளனர். இன்னும் சில தினங்களில் த.வெ.க.வின் அதிரடி அரசியல் நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






