தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை வீழ்த்த வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெரியார் தொடங்கி வைத்த சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நேற்று நடைபெற்றது.
சென்னை,
பெரியார் தொடங்கி வைத்த சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு சென்னையை அடுத்த மறைமலைநகரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கல்வெட்டை திறந்து வைத்தார்.
அதன்பின்னர் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கொள்கையற்ற அதிமுகவினரால் 10 ஆண்டுகள் பாழாய்போன தமிழ்நாட்டை மக்களின் ஆதரவோடு மீட்டெடுத்து இந்த 4 ஆண்டுகளில் வளப்படுத்தி இருக்கிறோம் என்றும் இதை திராவிடத்துக்கு எதிரான பா.ஜனதாவும், திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாத எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவும் மீண்டும் கபளீகரம் செய்ய துடிக்கிறார்கள் என்றும் தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என கூறினார்.
இந்த நிலையில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்” என்று தெரிவித்துள்ளார்.






