பொதுக்குழுவில் கூடிடுவோம்.. பொதுத்தேர்தலில் வென்றிடுவோம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்


பொதுக்குழுவில் கூடிடுவோம்.. பொதுத்தேர்தலில் வென்றிடுவோம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்
x

எதிர்க்கட்சிகள் இட்டுக்கட்டி அவதூறுகளை பரப்பி வருகின்றன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

கூடிக் கலைவதல்ல கழகத்தின் நிகழ்வுகள். திசைவழியைத் தீர்மானிக்கும் செயல்பாடுகளைத் திட்டமிடும் களமாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு நிகழ்வும் அமைகின்றது. இதுதான் இந்த இயக்கத்தின் முக்கால் நூற்றாண்டு கால வரலாறு. கழகம் என்ன முடிவெடுக்கும் என்பதை உடன்பிறப்புகள் மட்டுமல்ல, மாற்று இயக்கத்தினரும் உற்று நோக்குகின்ற சூழலில்தான் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த கூடல் மாநகராம் மதுரையில் கழகப் பொதுக்குழு கூடுகிறது.

பேரறிஞர் அண்ணா தலைமையில் உருவாகி, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையில் இரும்புக் கோட்டையாகக் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் இன்று இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மாநிலக் கட்சி என்ற நிலையை அடைந்திருப்பதற்குக் காரணம், பொதுக்குழு - செயற்குழு - மாநாடு என எதுவாக இருந்தாலும் அது கொள்கை சார்ந்த நோக்கத்துடன் நடத்தப்பட்டு, அதற்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, செயல்வடிவம் பெறுவதால்தான்.

கட்சியைத் தொடங்கிய நாளிலேயே "களத்திற்கு வா போராடலாம் - சிறையை நிரப்பலாம்" என்று கழகத் தொண்டர்களை அழைத்தார் பேரறிஞர் அண்ணா. பதவி சுகத்திற்காகவே கட்சி தொடங்குபவர்கள், பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கட்சியையே அடமானம் வைத்தவர்கள் நிறைந்த இன்றைய அரசியல் சூழலில், சிறைவாசத்தைச் சிரித்த முகத்துடன் ஏற்று, நெருக்கடி நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டுக் கடந்த வெற்றிகரமான இயக்கமாகச் செம்மாந்து நிற்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த மகத்தான இயக்கத்தைக் கட்டிக்காத்த உடன்பிறப்புகளாம் உங்களை வழிநடத்தும் தலைவனாக எனக்கு நீங்கள் அளித்திருக்கும் வாய்ப்பை, மக்கள் நலன் காக்கவும் - மாநில உரிமைகளை மீட்கவும் பயன்படுத்தி வருகிறேன்.

முந்தைய ஆட்சியாளர்கள்போல பதவிக்காக, மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைக்கும் வழக்கம் திராவிட மாடல் அரசுக்கு இல்லை. கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு தர மறுத்தாலும், அண்ணா தந்த இருமொழிக் கொள்கையே இங்கே நிலைத்திருக்கும் என்ற உறுதியுடன் மாநில அரசின் நிதியில் கல்விக்குச் செலவிடுகிறோம். நகைக்கடன் நிபந்தனைகளால் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளை மக்கள் நாட முடியாத நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் மக்களுக்கு உதவுகிறோம். இதுதான் மக்கள் நலன் காக்கும் அரசின் செயல்பாடு. மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காத உறுதிப்பாடு.

இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது. அவர்களின் மனம் நம் பக்கம் உள்ள நிலையில், தேர்தல் களம் நம் வெற்றிக்கு முரசு கொட்டி அழைக்கிறது. உடன்பிறப்புகளால் தலைவர் பொறுப்பை ஏற்றது முதல், எதிர்கொண்ட தேர்தல் களங்கள் அனைத்திலும் கழகம் தொடர்ந்து வெற்றிவாகை சூடி வருகிறது. சளைக்காத உழைப்பும், சரியான வியூகமும்தான் நம் வெற்றிக்கு அடிப்படை.

திராவிட மாடல் அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி, பொய்ச் செய்திகளைப் பூதாகரமாக்கித் தங்களைத் தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியுமா எனக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. தனித்தனியாகவும், கூட்டணி சேர்ந்தும், இரகசியமாக ஆலோசனைகள் நடத்தியும் எதிரணியினர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நமக்கு எதிரான பரப்புரை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கான கடமை என்ன? நம் இலட்சியப் பயணத்தின் இலக்கு எது? என்பதையெல்லாம் உடன்பிறப்புகளாம் உங்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஜூன் 1-ஆம் நாள் கூடுகிறது. கழகத்தின் தலைவர் என்ற முறையிலும் உங்களில் ஒருவனாகவும் பொதுக்குழு உறுப்பினர்களையும் சிறப்பு அழைப்பாளர்களையும் அன்புடன் அழைக்கின்றேன்.

வீரமும் பாசமும் நிறைந்த மதுரை மண்ணில் பொதுக்குழுவா, மாநாடா என வியக்கின்ற வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார் மதுரை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி அவர்கள். மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சேடப்பட்டி மு.மணிமாறன் ஆகியோர் உடனிருந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள்.

ஜூன் 1 காலை 9 மணிக்குப் பொதுக்குழு தொடங்குகிறது. அதற்கேற்ப பொதுக்குழு உறுப்பினர்களான உடன்பிறப்புகள் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உரிமை மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். காலை 8 மணிக்கே அரங்கத்திற்கு வருகை தந்து, கழகப் பொதுச்செயலாளர் தங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தைக் காட்டி, பதிவு செய்துகொண்டு, அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து, சரியான நேரத்தில் பொதுக்குழு தொடங்கிட உடன்பிறப்புகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.

பொதுக்குழு உறுப்பினர்களின் மனம் திறந்த கருத்துகள், கழக முன்னோடிகளின் உணர்ச்சிமிகு உரைகள், இந்திய அரசியலையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் தீர்மானிக்கவிருக்கும் தீர்மானங்கள், அவற்றைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை முன்வைக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய உரை என மதுரை பொதுக்குழு செறிவான நிகழ்ச்சி நிரலுடன் நடைபெறவிருக்கிறது.

2026 சட்டமன்றப் பொதுத்தேர்தல் களத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு, மக்கள் நலன் காக்கும் ஆட்சி தொடர்ந்திட ஆற்ற வேண்டிய களப்பணிகளைத் தீர்மானித்திடவும், அதனை ஒவ்வொரு தொகுதியிலும் செயல்படுத்தி வெற்றியை உறுதி செய்திடவும் கழக உடன்பிறப்புகளைப் பொதுக்குழுவில் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். பொதுக்குழுவில் கூடிடுவோம்! பொதுத்தேர்தலில் வென்றிடுவோம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story