தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,230 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்


தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,230 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
x

சென்னையில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடந்தது.

சென்னை

சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியக் கருத்தரங்கு கூட்ட அரங்கில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் வீரராகவராவ், தொழிலாளர் ஆணையர் ராமன், வாரிய செயலாளர்கள், மண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், வட்டார தொழிலாளர் இணை ஆணையர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், "முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு அமைப்பு சாரா தொழிலாளர் நலனில் அதிக அக்கறை கொண்டு செயல்படும் அரசு. எனவே தொழிலாளர் துறை அலுவலர்கள் 20 அமைப்பு சாரா நல வாரியங்களில் பெறப்படும் கேட்புமனுக்களின் மீது உடனுக்குடன் தீர்வு காணவும், நிலுவை ஏதுமின்றி செயல்படவும் அறிவுறுத்தினார். குறிப்பாக, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி மானியம் தொடர்பான கேட்பு மனுக்களின் மீது தனி கவனம் செலுத்தி சரியான விண்ணப்பங்களை கண்டறிந்து பயனாளிகளுக்கு பயன் கிடைக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தனிநபர் விபத்து நிவாரணம், விபத்து ஊனம், இயற்கை மரணம்/ ஈமச்சடங்கு, கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம்/ குடும்ப ஓய்வூதியம், வீட்டு வசதித்திட்டம், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கான உதவித் தொகை, தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித் தொகை மற்றும் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு ஊக்க உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்கிட தொழிலாளர் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் புதியதாக 24,89,174 உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.3,230 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் தொழிலாளர் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு செய்தார். தொழிலாளர் துறை அலுவலர்கள் மேலும் சிறப்பாக செயல்பட அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை அவர் வழங்கினார்.

1 More update

Next Story