திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய்யின் நிலைப்பாடு என்ன? - கி.வீரமணி கேள்வி

இளம் பெரியார் எனும் தகுதி துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கிறது என்று கி.வீரமணி தெரிவித்தார்.
சென்னை,
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க.கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதை கண்டிக்கிறோம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், கி. வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
நாள்தோறும் ஜனநாயக விரோத செயல்களை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் செய்து வருகிறது. அமலாக்கத்துறையை தவறான ஆயுதமாக பா.ஜ.க. பயன்படுத்தி வருகிறது. ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளதாக செய்திகள் வருவது அதிர்ச்சியளிக்கிறது. இளம் பெரியார் எனும் தகுதி துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கிறது. யாரெல்லாம் பெரியார் கொள்கையை தூக்கி பிடிக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் பெரியார்தான்.
பெரியார் வழியில் செல்கிறேன் என விஜய் சொல்கிறார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய்யின் நிலைப்பாடு என்ன? கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் அவர் தனது கட்சியின் கொள்கையை இதுவரை சொல்லவில்லை. முதல்-அமைச்சராக வேண்டும் என்கிற முடிவை தவிர அவர் வேறு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






