எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துவிட்டு தற்போது ஆதரித்து பேசுவது ஏன்? அண்ணாமலை விளக்கம்


எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துவிட்டு தற்போது ஆதரித்து பேசுவது ஏன்? அண்ணாமலை விளக்கம்
x

அண்ணாமலை என்ற தொண்டன் கட்சி சொன்னதை கேட்டு செயல்படுத்திக் கொண்டு இருக்கிறேன் என்று கூறினார்.

சென்னை,

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி பிரிந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அண்ணாமலை. அதிமுக தலைவர்கள் பற்றியும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் கடுமையாக விமர்சித்து வந்தார். ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை தற்குறி என்று விமர்சித்து நேரடியாக மோதினார். இதன்பின் அண்ணாமலை பதவி பறிப்புக்குப் பின், மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டது.

பாஜக கூட்டணி அமைந்தபோதிலும் அண்ணாமலை தனது அதிரடி பேட்டியில் கூட்டணிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். கூட்டணி ஆட்சி என்று தொடர்ந்து பேசி வந்த அண்ணாமலை, ஒரு கட்டத்தில் பாஜக ஆட்சி என்றே கூறத் தொடங்கினார். இதனால் அதிமுகவினர் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். அதேபோல் முதல்வர் வேட்பாளரை டெல்லி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை இடையிலான மோதல் தொடர்ந்து வருவதாக பார்க்கப்பட்டது. ஆனால் நெல்லையில் நடந்த பாஜக பூத் கமிட்டி மாநாட்டில், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க ஒவ்வொரு பாஜக தொண்டனும் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

இந்த நிலையில் சென்னையில் ஜி.ஜே. மூப்பனாரின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அண்ணாமலை, வரும் 2026 தேர்தலில் முதல்வர் நாற்காலியில் எடப்பாடி பழனிசாமி அமருவார். தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும், மாற்றம் வரட்டும், ஒரு புரட்சி வரட்டும் என்று பேசினார். எதிரும் புதிருமாக இருந்த இரு தலைவர்களும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்தது அ.தி.மு.க. மற்றும் பாஜக தொண்டர்களுக்கு ஒரு உற்சாகத்தை அளித்தது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலையிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை கூறியதாவது:-

“நான் இந்தக் கட்சியினுடைய தொண்டன். அதற்கு பிறகுதான் தலைவர். கட்சி முடிவு எடுத்துள்ளது, தலைவர் முடிவு எடுத்திருக்கிறார்கள். அதை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. அதனால்தான் ‘கடமை’ என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். கட்சி சொல்லிவிட்டது. மோடி சொல்லிவிட்டார். இதை செயல்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது. நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தால் கட்சி கட்டுக்கோப்பாக இருக்காது. அதனால் அந்த பிரச்சினை முடிந்தது. தலைவர்கள் சொல்லிவிட்டார்கள், அதனை செய்ய வேண்டியது எங்களுடைய கடமை. அண்ணாமலை என்ற தொண்டன் கட்சி சொன்னதை கேட்டு செயல்படுத்திக் கொண்டு இருக்கிறேன்” என்றார்.

1 More update

Next Story