பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம்; குஜராத்திற்கு இருக்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு ஏன் மறுக்கப்படுகிறது? - செல்வப்பெருந்தகை கேள்வி


பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம்; குஜராத்திற்கு இருக்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு ஏன் மறுக்கப்படுகிறது? - செல்வப்பெருந்தகை கேள்வி
x

தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஜனாதிபதி முடிவெடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை பல்கலைக் கழக சட்ட திருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் மற்றும் நீக்கம் தொடர்பான அதிகாரங்களை வேந்தரான கவர்னரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. அதில் பல்கலைக் கழக சிண்டிகேட் நிதிச் செயலாளரை உறுப்பினராக சேர்ப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டிருந்தன.

தமிழ்நாடு சட்டசபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கவர்னர் ஆர்.என். ரவி அதற்கு ஒப்புதல் தராமல் மூன்றாண்டுகள் கழித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களும், சென்னை பல்கலைக் கழக மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பியுள்ளார். இதன்மூலம் இந்த சட்ட திருத்த மசோதா அமலுக்கு வராத நிலை உருவாகியுள்ளது.

ஏற்கனவே, தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் முடக்கி வைத்திருப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் ஏப்ரல் 2025 வாக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவான நெறிமுறைகளை வகுத்தது. தமிழ்நாடு சட்டசபை நிறைவேற்றுகிற மசோதாவுக்கான ஒப்புதலை கவர்னர் மூன்று மாதங்களுக்கு மேலாக நிலுவையில் வைத்திருக்க முடியாது. திருப்பி அனுப்பிய மசோதாவுக்கு கவர்னர் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டுமென்றும் அந்த தீர்ப்பில் தெளிவாக கூறியிருந்தது.

இந்நிலையில், மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பது குறித்து 14 கேள்விகளுக்கு அரசமைப்பு சட்டப் பிரிவு 142 மூலம் கருத்து கேட்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு நவம்பர் 2025-ல் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதை ஏற்றுக் கொண்டது. ஒரு மாநிலத்தில் இரு நிர்வாக அதிகாரங்கள் இருக்கக் கூடாது, அமைச்சரவைக்குத் தான் முழு அதிகாரம், மசோதா மற்றும் துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

கவர்னர் கிடப்பில் போட்டு வைத்து மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு பிரிவு 142-ஐ பயன்படுத்தி கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி ஒப்புதல் வழங்கி தீர்ப்பளித்தது. அரசமைப்புப் சட்ட பிரிவு 200, 201 கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இதில் கவர்னரின் அதிகாரங்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கால நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நிலுவையில் இருந்த பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன மசோதா திருப்பி அனுப்பப்பட்டிருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. மத்திய பா.ஜ.க. அமைச்சரவையின் அறிவுரை மற்றும் ஆலோசனையின்படி செயல்படுகிற ஜனாதிபதி தமிழ்நாடு அரசுக்கு எதிராக முடிவெடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மற்றும் தெலுங்கானாவில் பல்கலைக் கழக துணை வேந்தர்களை மாநில அரசுதான் நியமிக்கிறது. குஜராத் மாநிலத்திற்கு இருக்கிற உரிமை தமிழ்நாடு அரசுக்கு ஏன் மறுக்கப்படுகிறது ? மாநில அரசின் நிதியிலிருந்து செயல்படுகிற பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கிற அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு வழங்காமல் கவர்னருக்கு வழங்க முற்படுவது, அதற்கு ஜனாதிபதி இசைந்து போவது ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிரானதாகும்.

தற்போது ஜனாதிபதி மூன்றாண்டுகளுக்குப் பிறகு, பல்கலைக் கழக துணை வேந்தர் நியமன மசோதாவை திருப்பி அனுப்பியிருப்பது குறித்து அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழ்நாடு முதல்-அமைச்சர் பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக நலனில் அக்கறையுள்ள அனைத்து கட்சிகளும் உறுதுணையாக இருப்பது மிகமிக அவசியமாகும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story