நீலகிரியில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை - பயணிகள் அச்சம்

அரசு பஸ்சை காட்டு யானை வழிமறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மசினகுடி, சிங்காரா பகுதிகளை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளது. தொடர் மழை காரணமாக வனப்பகுதி பசுமையாக காணப்படுவதால், குட்டிகளுடன் காட்டு யானைகள் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையோரம் வரும் காட்டு யானைகள் வாகனங்களை வழிமறித்து வருவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர். சில சமயங்களில் வாகன ஓட்டிகளை துரத்தி வருகிறது.
இந்தநிலையில் நேற்று சிங்காரா மின்வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து பள்ளி மாணவர்களை மசினகுடிக்கு அழைத்து சென்ற மின்வாரிய பஸ், அந்த வழியாக வந்த ஜீப், கார் போன்ற வாகனங்களை காட்டு யானை வழிமறித்தது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தினர். தொடர்ந்து அந்த யானை சாலையிலேயே நீண்ட தூரம் வழிவிடாமல் நடந்து சென்றது.
ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற காட்டு யானை, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து பள்ளி பஸ், பிற வாகனங்கள் மசினகுடிக்கு சென்றன. இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு பஸ்சை காட்டு யானை வழிமறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.