அஜித்குமார் போன்று எனது கணவரையும் போலீசார் தாக்குவார்களோ.. த.வெ.க. மாவட்ட செயலாளரின் மனைவி கண்ணீர்

எனது கணவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என கண்ணீருடன் கூறினார்.
கரூர்,
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில் த.வெ.க. மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், அவருடைய மனைவி ராணி நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவர் மதியழகன், விஜய் நடிக்க ஆரம்பித்த காலக்கட்டத்தில் இருந்தே அவரின் ரசிகராக இருந்து வருகிறார்.
கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் நடைபெறுவதற்கு முதல்நாள் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் தான், இப்போது வரை வீடு திரும்பவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்டதாக தொலைக்காட்சியில் செய்தி பார்த்தேன். இப்போது எனது கணவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. காவல்துறையும் எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை காவலாளி அஜித்குமார் போன்று எனது கணவரையும் போலீசார் பயங்கரமாக தாக்குவார்களோ என்ற அச்சம் உள்ளது.
அரசுக்கும், காவல்துறைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள் தான் வைக்கிறேன். எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். தயவு செய்து என் கணவரை எங்கு வைத்து இருக்கிறீர்கள். அவர் எப்படி இருக்கிறார் என்பதை சொல்லுங்கள். அவரை என் கண்ணில் காட்டுங்கள் என கண்ணீர் மல்க கூறினார்.






