செங்கோட்டையனின் அனுபவத்தை த.வெ.க. முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமா? - கார்த்தி சிதம்பரம் கேள்வி

செங்கோட்டையனின் அனுபவம் நிச்சயமாக த.வெ.க.விற்கு சாதகமானதுதான் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
“செங்கோட்டையன் சென்றதால் அ.தி.மு.க.வில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாது. அ.தி.மு.க.விற்கு வாடிக்கையாக வரக்கூடிய வாக்குகளை செங்கோட்டையன் பிரித்து செல்லவில்லை. ஆனால் 50 வருடங்கள் அரசியலில் இருந்திருக்கிறார். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
ஒரு அனுபவம் வாய்ந்த நபர் விலகிச் சென்றதால் அ.தி.மு.க.விற்கு ஒரு மைனஸ் ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையனின் அனுபவம் நிச்சயமாக த.வெ.க.விற்கு சாதகமானதுதான். ஏனெனில் அந்த கட்சியில் தேர்தலை சந்தித்து அனுபவம் பெற்றவர்கள் யாரும் கிடையாது. அதே சமயம் செங்கோட்டையனின் அனுபவத்தை த.வெ.க. முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமா? அவர் சொல்லும்படி நடந்து கொள்வார்களா? அவருக்கு முழு அதிகாரம் கொடுப்பார்களா? என்பதுதான் கேள்வி.”
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.






