தேமுதிக வாக்குகளை விஜய் பிரிப்பாரா? பிரேமலதா பதில்

20 ஆண்டுகள் கண்ட கட்சி தே.மு.தி.க.. விஜயகாந்துக்கு நிகர் விஜயகாந்த் மட்டும்தான் என்று பிரேமலதா கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது:- இப்போது தான் விஜய் உங்களுக்கு பெரியதாக தெரிகிறார். ஆனால், விஜய் சிறிய பையனாக இருந்ததில் இருந்தே பார்த்து வருகிறோம். என்னை பொருத்தவரையில் அவர் எனது மகன் போன்றவர். அவருக்காக ‘செந்தூரபாண்டி’ படத்தில் விஜயகாந்த் நடித்து கொடுத்தார். இன்று அவர் நன்றாக இருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். அதற்காக அவர் விஜயகாந்த் படத்தை அரசியலுக்காக பயன்படுத்தினால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
எங்களுக்கென்று ஒரு அரசியல் கட்சி இருக்கிறது. 20 ஆண்டுகள் கண்ட கட்சி தே.மு.தி.க.. விஜயகாந்துக்கு நிகர் விஜயகாந்த் மட்டும்தான். அரசியலில் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. விஜயகாந்தை அண்ணன் என்று கூறுவதாலேயே விஜயை நாங்கள் தம்பி என்று கூறுகிறோம். விஜய் எங்களுடைய வாக்குகளை பிரிப்பார் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.






