மகளிர் விடுதியில் பெண் வெட்டிக்கொலை - கோவையில் அதிர்ச்சி

அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த ஸ்ரீபிரியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
கோவை,
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன்-ஸ்ரீபிரியா தம்பதிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பாலமுருகனிடம் இருந்து பிரிந்து வந்து ஸ்ரீபிரியா கோவை மாவட்டத்திற்கு சென்று, தனியார் விடுதியில் தங்கி அங்குள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், ஸ்ரீபிரியாவுக்கும் அவரது உறவினரான இசக்கிராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பாலமுருகனுக்கு இசக்கிராஜா அனுப்பி வைத்துள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பாலமுருகன், நேற்று இரவு கோவை வந்துள்ளார்.
தொடர்ந்து இன்று அதிகாலை ஸ்ரீபிரியா தங்கியிருந்த விடுதிக்கு பாலமுருகன் சென்றுள்ளார். விடுதியின் வாசலில் காத்திருந்த அவர், ஸ்ரீபிரியா வெளியே வந்தபோது தன்னிடம் இருந்த அரிவாளால் ஸ்ரீபிரியாவை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஸ்ரீபிரியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஸ்ரீபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பாலமுருகனை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகளிர் விடுதியில் தங்கியிருந்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






