பெண் கழுத்தறுத்து கொலை... குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்

4 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மகாலட்சுமி குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் பூங்கொடி. இவருடைய மகள் மகாலட்சுமி (29 வயது). இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கோதியழகனூரை சேர்ந்த வெங்கடேஷ் (34 வயது) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 4 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மகாலட்சுமி குழந்தைகளுடன் அரூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அரூருக்கு வந்த வெங்கடேஷ், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று காலை அரூருக்கு வந்தனர்.
வீட்டில் இருந்தபோது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், மனைவி மகாலட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்ததாக தெரிகிறது. இதில் ரத்தவெள்ளத்தில் மகாலட்சுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் வெங்கடேஷ் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வெங்கடேசை தேடி வருகிறார்கள்.






