தகுதியானவர்களுக்கு டிசம்பர் 15-ந்தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை; உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

‘‘உங்களுடன் ஸ்டாலின்’’ முகாம்கள் நவம்பர் 14-ந்தேதி முடிவடைய உள்ளதாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை' 2023 செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைத்தார். மகளிரின் பொருளாதார விடுதலைக்குத் துணை நிற்கும் இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு, இந்த உரிமைத் தொகையை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார்.
அவர்கள் அனைவருக்கும் கடந்த 26 மாதங்களில், சுமார் ரூ.26 ஆயிரத்தை நம்முடைய அரசு கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.30 ஆயிரம் கோடி உரிமைத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.
இத்திட்டத்தில், கூடுதலான மகளிர் பயனடைய வேண்டுமென்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் சில விதிகளை தளர்த்திக் கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக, அரசு மானியத்தில், 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்கள், ஓ.ஏ.பி. பெறும் குடும்பங்கள் ஆகியவற்றில், விதிகளைப் பூர்த்தி செய்யும் மகளிருக்கும் உரிமைத் தொகை சேர்த்து வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அவையில் அறிவித்தார்.
இந்தச் சூழலில், நம்முடைய முதல்-அமைச்சர், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூன் 19-ந்தேதி தொடங்கி வைத்தார். இந்த முகாம்களில், கிராமப்புறங்களில் 15 துறைகளின் வாயிலாக 45 சேவைகளும், நகர்ப்புறங்களில் 13 துறைகளின் வாயிலாக 43 சேவைகளும் அரசால் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த முகாம்கள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழும் மனுக்கள் ஏற்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். இதற்காக, நவம்பர் 15-ந்தேதி வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது. 15-ந்தேதி வரை 9 ஆயிரத்து 55 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் இதுவரை, உரிமைத் தொகை கேட்டு 28 லட்சம் பெண்கள் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.
‘‘உங்களுடன் ஸ்டாலின்’’ முகாம்கள் நவம்பர் 14-ந்தேதி முடிவடைய உள்ளன. இதற்கிடையே, புதிதாக உரிமைத்தொகை கோரி பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் வருவாய்த் துறைமூலம் நேரடி ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் நவம்பர் 30-ந்தேதிக்குள் முடிவடையும்.
முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியான பெண்களுக்கு வருகிற டிசம்பர் 15-ந்தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் முடிவெடுத்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.






