சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் - மாநகராட்சி அறிக்கை


சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் - மாநகராட்சி அறிக்கை
x
தினத்தந்தி 5 Sept 2025 8:22 PM IST (Updated: 5 Sept 2025 8:50 PM IST)
t-max-icont-min-icon

14 பாலங்கள் மூலம் நாள்தோறும் சராசரியாக 18 லட்சம் மக்கள் பயனடைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து மக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில், ரூ.276.75 கோடி மதிப்பீட்டில் 12 புதிய பாலங்களும், ரூ.6.92 கோடி மதிப்பீட்டில் 2 பாலங்களில் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 14 பாலங்கள் மூலம் நாள்தோறும் சராசரியாக 18 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் வசித்தும், வந்து சென்றும் வருகின்றனர். தமிழ்நாடு முதல்-அமைச்சர், மக்கள் தொகை பெருக்கம் மற்றும் போக்குவரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களினாலும், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இடங்களில் புதிய பாலங்கள் கட்டுதல் மற்றும் ஏற்கனவே உள்ள பாலங்களை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டு பல்வேறு இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்பட்டும், புனரமைக்கப்பட்டும் வருகிறது.

அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில், ரூ.276.75 கோடி மதிப்பீட்டில் கொளத்தூர்-வில்லிவாக்கம் ரெயில்வே சந்திக்கடவில் மேயர் சிட்டிபாபு பாலம், திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட ஸ்டீபன்சன் சாலையில் செங்கை சிவம் பாலம், ராயபுரம் மண்டலத்தில் யானைக்கவுனி மேம்பாலம், போஜராஜன் நகர் வாகனச் சுரங்கப்பாதை, கூவம் ஆற்றின் குறுக்கே அருணாச்சலம் சாலையில் புதிய பாலம், கோடம்பாக்கம் மண்டலத்தில் தியாகராயநகர் ஆகாய நடைமேம்பாலம், மணலி மண்டலத்திற்குட்பட்ட புழல் உபரிநீர் கால்வாயின் குறுக்கே ஆமுல்லவாயல் பாலம், மணலி பர்மா நகர் பாலம், அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட ஓட்டேரி நல்லாவின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் பாலம், தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையின் குறுக்கே நடைமேம்பாலம், ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட ஜீவன் நகர் பாலம், தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொடுங்கையூர் கால்வாயின் குறுக்கே பெட்டக வடிவப் பாலம் என 12 புதிய பாலங்கள் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், ரூபாய் 6.92 கோடி மதிப்பீட்டில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் எம்.கே.பி. நகர் பாலம் மற்றும் வைத்தியநாதன் பாலம் ஆகிய 2 பாலங்களில் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த 14 பாலங்களின் மூலம் நாள்தோறும் சராசரியாக 18 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

ரூ.276.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய பாலங்கள்:

1. வில்லிவாக்கம் ரெயில்வே சந்திக்கடவில் மேயர் சிட்டிபாபு பாலம்

கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் பகுதியில் வசிக்கும் மக்கள் சந்திக்கடவு எண்.1 அடிக்கடி மூடப்படுவதால் அதனை கடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை நீக்கும் வகையில் வில்லிவாக்கம் சந்திக்கடவு எண்.1-க்கு மாற்றாக வடக்கில் கொளத்தூர் பிரதான சாலையையும் தெற்கில் ஐ.சி.எப். சாலையையும் இணைக்கும் வண்ணம் ரூ.61.98 கோடி மதிப்பீட்டில் 500 மீட்டர் நீளம் மற்றும் 8.50 மீட்டர் அகலத்தில் “மேயர் சிட்டிபாபு மேம்பாலம்” கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

இம்மேம்பாலமானது, கொளத்தூர் பகுதியை அண்ணாநகர் பகுதியுடன் இணைக்கும் முக்கிய இணைப்பு பாலமாகும். இம்மேம்பாலத்தினால் கொளத்தூர் ஜி.கே.எம். காலனி, பெரியார் நகர், கொரட்டூர், பாடி, ஐ.சி.எப். அண்ணா நகர் மற்றும் பெரம்பூர் பகுதிகளைச் சார்ந்த சுமார் 2 இலட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர்.

2. ஸ்டீபன்சன் சாலையில் செங்கை சிவம் பாலம்

திரு.வி.க.நகர் மண்டலம், புளியந்தோப்பு மற்றும் பெரம்பூர் பகுதிகளை இணைக்கும் வகையில், ஸ்டீபன்சன் சாலையில் 52.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே பழுதடைந்த பழைய பாலத்தை இடித்துவிட்டு, 282 மீட்டர் நீளம் மற்றும் 22.70 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம், 7.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 548 மீட்டர் நீளத்தில் பாலத்திற்கான சாலை மற்றும் அணுகு சாலை, மையத்தடுப்பு, இருபுறமும் நடைபாதை, மையத்தடுப்பில் வண்ணப் பூக்களுக்கான செடிகள் நடுதல் போன்ற பணிகள், ரூ.6.8 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் என மொத்தம் 830 மீட்டர் நீளத்தில் ரூ.66.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட, “செங்கை சிவம் பாலம்” கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

மழைக்காலங்களில் இச்சாலையில் தேங்கும் மழைநீர் வடியும் வண்ணம் குக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி நல்லா கால்வாய் வரையிலும், புளியந்தோப்பு பகுதியில் தேங்கும் மழைநீர் வடியும் வண்ணம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் இருந்து ஓட்டேரி நல்லா கால்வாய் வரையிலும் மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் கட்டப்பட்டதன் மூலம், பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு, புரசைவாக்கம் மற்றும் வேப்பேரி பகுதிகளில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெரிதும் பயனடைந்து வருவதுடன், நாள்தோறும் சராசரியாக சுமார் 70 ஆயிரம் வாகன ஓட்டிகள் பயன்பெறுகின்றனர்.

3. யானைக்கவுனி மேம்பாலம்

ராயபுரம் மண்டலம், வார்டு-57ல் 9-R என ரெயில்வே துறையால் குறிக்கப்பட்ட யானைக்கவுனி சாலையில் உள்ள பழமையான மேம்பாலம் சேதமடைந்த நிலையில் இருந்தது. வடசென்னை செல்லும் வாகனங்களுக்கு இம்மேம்பாலம் ஒரு முக்கிய இணைப்பாகும். இம்மேம்பாலம் சேதமடைந்த நிலையில் இருந்ததால் இம்மேம்பாலத்தை இடித்துவிட்டு புதிய மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கான மதிப்பீட்டுத் தொகை ரூ.30.78 கோடி மூலதன மானிய நிதியின் மூலமும், ரெயில்வே பகுதிக்கான மதிப்பீட்டுத் தொகை ரூ.40 கோடி மதிப்பீட்டிலும் இந்த மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

இம்மேம்பாலத்தின் நீளம் 520 மீ மற்றும் அகலம் 20.10 மீ. ஆகும். இரயில்வே பகுதியின் நீளம் 150 மீ. மேம்பாலத்தின் இருபுறமும் 5மீ. அணுகு சாலையும், சால்ட் கோட்டார்ஸ் பகுதியில் 20.50 மீ. x 6.50 மீ. x 4.0 மீ. அளவிலான கீழ்மட்ட பாலமும் (Underpass) அமைக்கப்பட்டுள்ளது.

இம்மேம்பாலம் வால்டாக்ஸ் சாலைக்கும் ராஜா முத்தையா சாலைக்கும் இடையிலான முக்கியமான இணைப்பு பாலமாகவும், சவுகார்பேட்டை, பிராட்வே, மின்ட், ஜார்ஜ் டவுன், புரசைவாக்கம், சூளை, புளியந்தோப்பு போன்ற பகுதிகளில் வசிக்கும் 5 லட்சம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது.

4. போஜராஜன் நகர் வாகனச் சுரங்கப்பாதை

வடசென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள போஜராஜன் நகர் மூன்று புறமும் ரெயில்வே இருப்புப் பாதையினால் சூழப்பட்டுள்ளதால், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ரெயில்வே சந்திக்கடவின் மூலமே வெளியே செல்ல முடியும். மேலும், அவசர காலங்களில் அவர்களால் வெளியே செல்வது மிகவும் சிரமமாக இருந்தது.

எனவே இங்கு வசிக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட வடசென்னைப் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, போஜராஜன் நகரில் வரையறுக்கப்பட்ட வாகனச் சுரங்கப்பாதை (Limited Use Subway) அமைக்கும் பணி கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ.30.13 கோடி மதிப்பீட்டில் 207மீ. நீளம்(ரெயில்வே பகுதி 37 மீட்டர் உட்பட), 6 மீ. அகலத்துடன் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

மேலும், மழைக்காலங்களில் மழைநீரை வெளியேற்ற ஒரு நீர் சேகரிக்கும் கிணறு, 85HP திறன் கொண்ட மோட்டார் பம்பு மற்றும் ஒரு ஜெனரேட்டர் நிறுவப்பட்டுள்ளன. இப்பணியின் மூலம் போஜராஜன் நகர், சீனிவாசன் நகர் மற்றும் மின்ட் மார்டன் சிட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் பொதுமக்கள் பயன்பெறுகின்றனர்.

5. கூவம் ஆற்றின் குறுக்கே அருணாச்சலம் சாலையில் கூடுதல் பாலம்

ராயபுரம் மண்டலம், வார்டு - 62, அருணாச்சலம் சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.9.55 கோடி மதிப்பீட்டில் 77 மீ. நீளம், 10.5 மீ. அகலத்துடன் கூடுதல் பாலம் கட்டப்பட்டு கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும், பழைய பாலத்தினை மேம்படுத்தி அழகுமிகு மின் விளக்குகள் அமைத்து, மேயர் சுந்தர ராவ் ரவுண்டானா விரிவுபடுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

இப்பழைய பாலத்தில் இருவழிப்பாதையாக இருந்த வழித்தடத்தினை இரண்டு தனித்தனி பாலப்பாதையாக மாற்றியமைத்து போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது. இப்பாலமானது சிந்தாதிரிபேட்டை, எழும்பூர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், இவ்வழியாக தலைமைச் செயலகம் மற்றும் அண்ணா சாலை செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும், நாள்தோறும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகன ஓட்டிகள் பயனடைகின்றனர்.

6. தியாகராயநகர் ஆகாய நடைமேம்பாலம்

தியாகராயநகர், மாம்பலம் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் இருந்து ரெயில்வே மார்க்கெட் சாலை, மேட்லி சாலை வழியாக தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை ரூ.28.45 கோடி மதிப்பீட்டில் நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது

மாம்பலம் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தை தியாகராய நகர் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையிலும், மாம்பலம் இரயில் நிலைய நடைமேம்பாலத்திலிருந்து ரெயில்வே மார்க்கெட் சாலை, மேட்லி சாலை வழியாக தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை 28 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 7 மீட்டர் உயரத்தில், 570 மீட்டர் நீளம் மற்றும் 4.20 மீட்டர் அகலத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆகாய நடைமேம்பாலத்தில் மின்னாக்கிகள் (Generators), காவல்துறை கண்காணிப்பு அறையுடன் இணைக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள், பொதுமக்களுக்கான அறிவிப்பு ஒலிபெருக்கிகள், துருப்பிடிக்காத எஃகிலான குப்பை கூடைகள், பாதுகாவலர் அறைகள், நவீன கழிவறைகள் போன்ற கூடுதல் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

தியாகராய நகர் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான ரங்கநாதன் தெரு, மேட்லி சாலை, மார்க்கெட் சாலை, நடேசன் தெரு ஆகிய இடங்களில் பாதசாரிகளின் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையிலும், ரெயில் மற்றும் பேருந்து பயணிகள் சிரமமின்றி இரயில் மற்றும் பேருந்து நிலையத்தை அடைந்திட இந்த ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாய நடைமேம்பாலமானது பல்வகை போக்குவரத்தினை ஒருங்கிணைக்கும் வகையில், தென் தமிழகத்திலிருந்து வரும் ரெயில் பயணிகள் மற்றும் மின்சார தொடர்வண்டியில் பயணிக்கும் பயணிகள் சிரமமின்றி தியாகராய நகர் பேருந்து நிலையத்தை அடையும் வண்ணம், மாம்பலம் இரயில் நிலைய நடைமேம்பாலத்துடன் இந்த ஆகாய நடைமேம்பாலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாய நடைமேம்பாலத்தால் நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் மக்கள் பயனடைகின்றனர்.

7. புழல் உபரிநீர் கால்வாயின் குறுக்கே ஆமுல்லவாயல் பாலம்

மழைக் காலங்களில் வைக்காடு – ஆமுல்லவாயில் சாலை, 100 அடி சாலையையும் ஆண்டார் குப்பம் – செங்குன்றம் சாலையையும் இணைக்கும் தரைப்பாலத்தினை பயன்படுத்த இயலாத வகையில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

பொதுமக்களின் சிரமத்தினை போக்கும் வகையில் மணலி மண்டலம், வார்டு-18ல் உள்ள மணலி பகுதியில் புழல் ஏரி உபரி நீர் கால்வாயின் குறுக்கே ஆமுல்லவாயலில் ரூ.15.90 கோடி மதிப்பீட்டில் 280மீ நீளம் மற்றும் 12.50 மீ. அகலத்துடன் (பாலத்தின் இருபுறமும் நடைபாதை உட்பட) கட்டபட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மணலி மற்றும் மாதவரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்பாலத்தினால் சுமார் 1 லட்சம் மக்கள் பயனடைகின்றனர்.

8. மணலி, புழல் ஏரி உபரி நீர் கால்வாயின் குறுக்கே மணலி பர்மா நகர் பாலம்

மழைக் காலங்களில் பர்மா நகர் பிரதான சாலை, மணலி விரைவுச் சாலையையும் இணைக்கும் பழைய இரும்புப் பாலத்தினை பயன்படுத்த இயலாத வகையில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். பொதுமக்களின் சிரமத்தினை போக்கும் வகையில் மணலி மண்டலம், வார்டு-16ல் உள்ள மணலி பகுதியில் புழல் ஏரி உபரி நீர் கால்வாயின் குறுக்கே பர்மா நகரில் ரூ.14.33 கோடி மதிப்பீட்டில் 260 மீ. நீளம் மற்றும் 12.00 மீ. அகலத்துடன் (பாலத்தின் இருபுறமும் நடைபாதை உட்பட) பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இப்பாலம் மணலி மற்றும் மாதவரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்பாலத்தினால் சுமார் 1 லட்சம் மக்கள் பயனடைகின்றனர்.

9. ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் பாலம்

அண்ணாநகர் மண்டலம், வார்டு-98ல் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் 2வது தெருவையும், கீழ்ப்பாக்கம் தோட்டம் தெருவையும் இணைக்கும் இடத்தில் இருந்த பழைய பாலத்தை இடித்துவிட்டு, ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் 65 மீ. நீளம் மற்றும் 11.50 மீ. அகலத்தில் (இருபுறமும் நடைபாதை உட்பட) பாலம் கட்டப்பட்டு கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், ஐ.சி.எப். அயனாவரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு இலட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர்.

10. நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையின் குறுக்கே நடைமேம்பாலம்

ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-110க்குட்பட்ட நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையின் குறுக்கே தெற்கு பகுதியிலுள்ள இரயில்வே நடைமேம்பாலத்தை சுடுகாடு அணுகுசாலையுடன் இணைக்கும் வகையில் ரூ.6.17 கோடி மதிப்பீட்டில் 24.6 மீட்டர் நீளம் மற்றும் 5 மீட்டர் அகலம் கொண்ட இரும்பாலான நடைமேம்பாலம் கட்டப்பட்டு கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது

இந்த நடைமேம்பாலத்தின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையின் நீளம் 130 மீட்டர் மற்றும் அகலம் 3 மீட்டர் ஆகும். இந்த நடைமேம்பாலம் அமைப்பதற்கான மதிப்பீட்டுத் தொகையில் ரூ.5.42 கோடியை மூலதன மானிய நிதியிலிருந்தும் (Capital Grant Fund) மின்விளக்குகள் அமைப்பதற்கான மதிப்பீட்டுத் தொகை ரூ.75 லட்சத்தை மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் (MPLAD) பெறப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேம்பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயனடைகின்றனர்.

11. ஆலந்தூர் ஜீவன் நகர் பாலம்

ஆலந்தூர் மண்டலம், வார்டு-161க்குட்பட்ட ஜீவன் நகர் 2வது தெருவையும், மேடவாக்கம் பிரதான சாலையையும் இணைக்கும் வகையில் ஆதம்பாக்கம் ஏரிக்கால்வாயின் குறுக்கே ரூ.5 கோடி மதிப்பீட்டில் 76 மீ. நீளம் (அணுகுசாலை உட்பட) மற்றும் 11.50மீ. அகலத்தில் (பாலத்தின் இருபுறமும் நடைபாதை உட்பட) புதிய பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

ஜீவன் நகர் 2வது தெருவில் இருந்து மேடவாக்கம் பிரதான சாலையை இப்பாலத்தின் வழியாக விரைவில் சென்றடையலாம். இந்தப் பாலம் ஜீவன் நகர், தில்லை கங்கா நகர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இப்பாலத்தின் மூலம் சுமார் 1 லட்சம் நபர்கள் பயனடைகின்றனர்.

12. கொடுங்கையூர் கால்வாயின் குறுக்கே பெட்டக வடிவப் பாலம்

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கேட் எண். 2 மற்றும் 3ல் தோட்டக் கழிவுகள், கட்டிடம் மற்றும் கட்டுமானக் கழிவுகள் மறுசுழற்சி மையங்களுக்கு கொடுங்கையூர் கால்வாயின் குறுக்கே ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் புதியதாக பெட்டக வடிவப் பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

ரூ.6.92 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட 2 பாலங்கள்:

1. தண்டையார்பேட்டை மண்டலம், எம்.கே.பி. நகர் பாலம் புனரமைப்பு

தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-37, மீனாம்மாள் சாலை, எம்.கே.பி. நகரில் கேப்டன் காட்டன் கால்வாயின் குறுக்கே உள்ள பாலத்தில் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

2. தண்டையார்பேட்டை மண்டலம், வைத்தியநாதன் பாலம் புனரமைப்பு

தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-38, வைத்தியநாதன் மேம்பாலச் சாலையில் உள்ள வைத்தியநாதன் பாலத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story