குடும்ப தகராறில் காதல் மனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளி

கோப்புப்படம்
குடும்ப தகராறில் மனைவியை தொழிலாளி அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பூமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (31 வயது). இவர், சேலத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரும், சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த ரத்தினம்மாள் (25 வயது) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஷாலினி (7 வயது), மாலினி (5 வயது) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் பிரகாஷ் தனது மனைவி ரத்தினம்மாள் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து அடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ் இரும்பு கம்பியால் மனைவியை தாக்கியுள்ளார். பலத்த காயம் அடைந்த ரத்தினம்மாள் மயங்கி விழுந்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ரத்தினம்மாளை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக ரத்தினம்மாள் இறந்தார்.
இதுகுறித்து ரத்தினம்மாளின் தாயார் நவமணி ஓமலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை அடித்துக்கொலை செய்த பிரகாசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






