ஓடும் ரெயிலில் பெண் பயணிடம் நகை பறித்த வாலிபர்

ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்ததில் வாலிபர் படுகாயமடைந்தார்.
பாலக்காடு,
சென்னை எழும்பூர்-குருவாயூர் இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் தலச்சேரி-கோவை இடையே உள்ள பாலக்காடு அருகே வந்து கொண்டிருந்தது. தலச்சேரி பகுதியை சேர்ந்த 3 பெண்கள் ரெயிலில் பயணம் செய்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர், அதில் ஒரு பெண் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை திருடினார்.
உடனே அவரை அந்த பெண் பிடிக்க முயன்றார். இதில் அவரிடம் பாதி நகை வந்தது. மீதமுள்ள நகையை அந்த நபர் திருடி விட்டு ஓடும் ரெயிலில் இருந்து வெளியே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார்.
தகவல் அறிந்த பாலக்காடு ரெயில்வே பாதுகாப்பு போலீசார் விரைந்து வந்து, கஞ்சிக்கோடு-வாளையார் இடையே உள்ள சுள்ளிமடை பகுதியில் படுகாயம் அடைந்த நபரை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரகுமான் (வயது 31) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






