குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என கூறி இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி

கோப்புப்படம்
இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே மானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி தீபிகா (25 வயது). இவர் கடந்த ஜனவரி 10-ந்தேதி தனது செல்போனில் உள்ள டெலிகிராம் செயலியை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் அந்த டெலிகிராம் செயலி மூலம் தீபிகாவை தொடர்பு கொண்டு நான் அனுப்பும் ஓட்டல் புகைப்படத்திற்கு ரிவ்யூ கொடுத்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும் என்று கூறியுள்ளார்.
அதன்படி தீபிகா அந்த நபர் அனுப்பிய லிங்கினுள் சென்று தனது யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்து, ஓட்டலுக்கு ரிவ்யூ கொடுத்தார். அதன்பிறகு தீபிகாவின் வங்கி கணக்கிற்கு ரூ.300-ஐ அந்த நபர் அனுப்பி வைத்தார்.
இதையடுத்து அந்த நபர் சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறினார். இதை நம்பிய தீபிகா ரூ.3,998 செலுத்தி ரூ.4,300-ஐ திரும்ப பெற்றுள்ளார். பின்னர், 19 தவணைகளில் ரூ.11 லட்சத்து 6 ஆயிரத்து 103-யை அந்த நபர் அனுப்ப சொன்ன வங்கி கணக்கிற்கு தீபிகா அனுப்பி வைத்தார். ஆனால் டாஸ்க் முடித்தும் அவருக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் அந்த நபர் ஏமாற்றி மோசடி செய்து விட்டார்.
இதுகுறித்து தீபிகா விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் இளம்பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.






