ஆன்லைனில் வேலை வாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து ரூ.5 லட்சத்தை இழந்த இளம்பெண் தற்கொலை

ஆன்லைன் மோசடியில் ரூ.5 லட்சத்தை இழந்த இளம்பெண் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
ஆன்லைனில் வேலை வாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து ரூ.5 லட்சத்தை இழந்த இளம்பெண் தற்கொலை
Published on

திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி அருகே உள்ள விருப்பாச்சி பகுதியைச் சேர்ந்தவர் சிவசக்தி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா (25 வயது). கோவையைச் சேர்ந்தவரான லாவண்யா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிவசக்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சத்திரப்பட்டியை அடுத்த கோபாலபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு வித்யூத் குமரன் (4 வயது) என்ற மகனும், அதிதி (2 வயது) என்ற மகளும் உள்ளனர்.

லாவண்யா வீட்டில் இருந்தபடியே அஞ்சல்வழிக்கல்வி மூலம் பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். வேலைக்கும் முயற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவர் சமூக வலைதளங்களில் வந்த வேலை வாய்ப்பு விளம்பரங்களை பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டார்.

அதில் பேசிய மர்ம நபர்கள், வேலைக்குச் சேர பணம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர். இதனை நம்பிய லாவண்யா, அவர்களுக்கு பல தவணைகளாக ரூ.5 லட்சம் வரை ஆன்லைன் மூலம் செலுத்தி உள்ளார். ஆனால், வேலை கிடைக்கவில்லை. மேலும் ஆன்லைன் மர்ம நபர்களை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லாவண்யா சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சிவசக்தி வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். குழந்தைகளுடன் வீட்டில் இருந்த லாவண்யா திடீரென தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது லாவண்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

உடனடியாக அவர்கள் சிவசக்திக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து, லாவண்யாவை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லாவண்யாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் பழனி ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார். ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com