கணவன் - மனைவி தனிமையில் இருந்த வீடியோவை எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

போலீசார் விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் பெரும்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த பிரகாஷ் (வயது 27) என்பது தெரிய வந்தது.
வண்டலூர்,
சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஒரு பெண், தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் மொபைல் போனுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ வந்துள்ளது. அதில், அந்த பெண்ணும், அவரது கணவரும் தனிமையில் இருந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.
பின்னர் அந்த வீடியோவை அனுப்பிய மர்ம நபர், அந்த பெண்ணுடன் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தான் கேட்கும் பணத்தை தராவிட்டால், வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டி உள்ளார்.
இது குறித்து அந்த பெண், தனது கணவரிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த அவர், கிளாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மிரட்டல் விடுத்த நபர் பெரும்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த பிரகாஷ் (வயது 27) என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் பிரகாஷ் தலைமறைவானார். இதனையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். பின்னர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளைம் பகுதியில் பதுங்கியிருந்த பிரகாசை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது கணவன், மனைவி இருவரும் தனியாக இருந்ததை பெண் ஒருவர் வீடியோ எடுத்து கொடுத்ததாக கூறினார். அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் பிரகாசை போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






