இந்தியாவுக்கே முன்னோடியான திட்டம்


இந்தியாவுக்கே முன்னோடியான திட்டம்
x

21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேரும் இனி ரேஷன் கடைகளுக்கு நடந்து சென்று கால்கடுக்க நீண்ட நேரம் கியூவில் நின்று பொருட்களை வாங்க வேண்டியது இல்லை.

தாயின் அன்பு தந்தையிடம் மிளிர்ந்தால் அவர் தாயுமானவராக போற்றப்படுகிறார். தாய் அன்பின் அடையாளம்தான் தாயுமானவர். “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்பது தாயுமானவரின் பொன்மொழி. திருச்சியில் தாயுமானவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் செட்டிப்பெண் மருத்துவம் என்ற திருவிழா நடந்து வருகிறது. தன்னையே நம்பி துதித்த ஒரு பெண்ணுக்கு அவளது பேறு காலத்தில், தாயாக உருவெடுத்து பிரசவம் பார்த்தார் இறைவன், அவரே தாயுமானவராக வணங்கப்படுகிறார் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட தாயுமானவரின் பெயரால் முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதில் ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமன்றி அரசு நலத்திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற மனிதநேயமிக்க அறிவிப்பு இடம்பெற்று இருந்தது. தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் 1.7 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்களுக்கு உணவு, வீடு மற்றும் அவர்களை வறுமை கோட்டுக்கு மேலே தூக்கிவிட என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்வதுதான் தாயுமானவர் திட்டம்.

இந்த இலக்கில் தமிழ்நாட்டில் பரம ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். இதன் முன்னோடியாக தமிழ்நாட்டில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை நேரில் வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள 34 ஆயிரத்து 809 ரேஷன் கடைகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 70 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் மற்றும் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள். ஆக இந்த 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேரும் இனி ரேஷன் கடைகளுக்கு நடந்து சென்று கால்கடுக்க நீண்ட நேரம் கியூவில் நின்று பொருட்களை வாங்கவேண்டியது இல்லை.

கடையில் பொருட்களை வாங்கி தூரத்தில் இருக்கும் தங்கள் வீடுகளுக்கு தூக்க முடியாமல் எடுத்து செல்லவேண்டிய அவசியமும் இல்லை. அதற்கு பதிலாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் வீடுகளுக்கே அந்த பொருட்கள் வந்து சேர்ந்துவிடும். இது தமிழக கூட்டுறவுத்துறையின் மிகப்பெரிய சேவையாகும். முதல்-அமைச்சர் சொன்னது போல இந்த திட்டத்தை செயல்படுத்தும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் செய்யப்போகும் மிகப்பெரிய மனிதாபிமான சேவையாகும். தமிழக அரசு நிறைவேற்றும் இந்த திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியான திட்டமாகும். நிச்சயமாக இந்த திட்டம் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மனங்களை குளிர வைக்கும் என்றாலும் வீட்டில் கணவருக்கு 70 வயதும், மனைவிக்கு 65 வயதும் இருந்தால் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறமுடியாது என்பதை மறுபரிசீலனை செய்து குடும்ப தலைவரின் வயதையே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

1 More update

Next Story