தாயின் பெயரில் ஒரு மரம்

பிரதமர் மோடி கடந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி "தாயின் பெயரில் ஒரு மரம்" என்ற இயக்கத்தை தொடங்கிவைத்தார்.
எந்த நாடு என்றாலும் சரி, மாநிலம் என்றாலும் சரி; மரவளம் அதிகமாக இருந்தால்தான் மழைவளம் பெருகும். அதனால்தான் நெடுஞ்சாலை, ரெயில்பாதை போன்ற அரசின் எந்த திட்டங்களுக்காகவும் ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாக 10 மரக்கன்றுகளை நடவேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பே இருக்கிறது. மேலும் எந்த அரசு விழாவாக இருந்தாலும் அதன் நினைவாக முக்கிய பிரமுகர்கள் மரக்கன்றை நடுவது வழக்கம். எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோது சென்னை கோட்டையில் ஒரு விழாவையொட்டி நட்ட 'மகிழ' மரக்கன்று இன்று மரமாக வளர்ந்து, அவரது புகழ்பாடிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது அவர் பிறந்தநாளையொட்டி வனத்துறை சார்பில் எத்தனையாவது பிறந்தநாளோ அத்தனை லட்சத்தில் மரக்கன்றுகள் நடுவது வழக்கம். அப்படி ஒரு பிறந்தநாள் சமயத்தில், அப்போது வனத்துறை செயலாளராக இருந்த சி.வி.சங்கர் உத்தரவின்பேரில் திருவான்மியூர் கடற்கரையில் நடப்பட்ட மரக்கன்றுகள் இன்றும் அந்த கடற்கரைக்கு எழில் ஊட்டிக்கொண்டிருக்கின்றன.
பொதுவாக ஒரு நாட்டில் வனவளம் 33 சதவீதம் கண்டிப்பாக இருந்தால்தான் அங்கு மழை அதிகமாக பொழியும். ஆனால் இந்தியாவில் 25.17 சதவீதம்தான் வனவளம், மரவளம் இருக்கிறது. அதுபோல தமிழ்நாட்டில் 20.34 சதவீதம்தான் வனவளம், மரவளம் உள்ளது. நமது மரவளத்தை பெருக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காக பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ''தாயின் பெயரில் ஒரு மரம்'' என்ற இயக்கத்தை தொடங்கிவைத்தார். புத்தர் பெருமான் போதி மரத்தடியில்தான் ஞானம் பெற்றார் என்பதற்கேற்ப டெல்லியில் அவர் பெயரால் அமைக்கப்பட்டுள்ள புத்தஜெயந்தி பூங்காவில் ஒரு அரச மரக்கன்றை நட்டு இந்த இயக்கத்தை மோடி தொடங்கிவைத்தார்.
நாட்டுமக்கள் அனைவருக்கும் அவர் ஒரு வேண்டுகோளை விடுத்தார். உங்கள் தாய்க்கு மரியாதை செலுத்தும்வகையில் எதிர்காலங்களில் மரக்கன்றுகளை நடுமாறு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அவ்வாறு செய்தது பற்றிய படத்தை Plant4Mother-ல் பகிரவும் என்று சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அன்று அவர் தொடங்கிவைத்த தாயின் பெயரில் ஒரு மரம் இயக்கம் 'ஆல் போல தழைத்து' வளர்ந்துள்ளது. இன்னும் ஒரு ஆண்டு ஆகவில்லை. அதற்குள் நாடுமுழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் தாயின் பெயரில் ஒன்று அல்ல, பல மரக்கன்றுகள் நட்டுள்ளதை தனது மாதாந்திர 'மனதின் குரல்' ஒலிபரப்பில் பெருமையோடு வெளியிட்டுள்ளார்.
இந்த இயக்கம் நம்மை ஈன்றெடுத்த தாயின் பொருட்டு மட்டுமல்ல, நம் அனைவரையும் ஈன்று சீராட்டி அரவணைத்துவரும் பூமித்தாயின் பொருட்டும்தான். கடந்த ஓராண்டில் இந்த இயக்கத்தின்படி நாடெங்கிலும் 140 கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இந்த முன்னெடுப்பை பார்த்து நமது நாட்டுக்கு வெளியேயும்கூட மக்கள் தங்களின் தாயாரின் பெயரால் ஒரு மரக்கன்றை நட்டிருக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் கொண்டிருக்கிறார். தாயின் பெயரால் மரம் நடும் நிகழ்வு தமிழ்நாட்டில் அவ்வளவு ஆழமாக வேரூன்றவில்லை. தமிழர்கள் அனைவரும் தங்கள் தாயை பெருமைப்படுத்தும் வகையில் ஆளுக்கு ஒரு மரக்கன்றை நட்டு பராமரித்தால் தமிழ்நாடு அந்த தாய்மார்களின் பெயரால் செழிக்கும். வீட்டின் அருகே மரக்கன்று நட இடம் இல்லாதவர்களுக்காக உள்ளாட்சி அமைப்புகள் பொதுவான ஒரு இடத்தை குறிப்பிட்டு இடம் கொடுத்தால் அங்கு வனங்கள் உருவாகும். மழைவளம் செழிக்கும்.