பணி வாய்ப்புகளை பறிக்கும் செயற்கை நுண்ணறிவு

மனிதன் சிந்தித்து செய்யவேண்டிய வேலைகளை செயற்கை நுண்ணறிவு அதாவது ஏ.ஐ. தொழில்நுட்பம் தானாகவே செய்துவிடுகிறது.
வேலைவாய்ப்பின் பரிணாம வளர்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொடக்கத்தில் கம்ப்யூட்டர் வந்தவுடன் இனி வேலைவாய்ப்புகள் அதிகரிக்காது. ஏனெனில் கம்ப்யூட்டர் மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் வேகமாக செய்துவிடும். எனவே இனி புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் நிலைமை குறைந்துவிடும் என்றே பேசப்பட்டது. ஆனால் கம்ப்யூட்டரால் முதலில் சற்று வேலைவாய்ப்புகள் குறைந்தாலும், பிறகு கம்ப்யூட்டரின் தாக்கத்தால் பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின. அதுபோல ரோபோ வந்தவுடன், மனிதன் செய்யும் அனைத்து வேலைகளையும் ரோபோ என்று சொல்லும் இந்த எந்திர மனிதன் செய்துவிடுகிறது. இனி மனிதனுக்கு மாற்றாக ரோபோதான் என்று பேசப்பட்டாலும், அதன் தாக்கம் எங்கும் பெரிதாக ஊடுருவவில்லை.
மனிதன் சிந்தித்து செய்யும் பணிகளை அதனால் முழுமையாக செய்யமுடியவில்லை. ரோபோ மனிதனின் கட்டளைப்படி செயல்படுகிறதே தவிர, தானாக எதையும் செய்துவிடுவதில்லை. ஆனால் இப்போது செயற்கை நுண்ணறிவு வந்த பிறகு நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. மனிதன் சிந்தித்து செய்யவேண்டிய வேலைகளை செயற்கை நுண்ணறிவு அதாவது ஏ.ஐ. தொழில்நுட்பம் தானாகவே செய்துவிடுகிறது. உலகம் முழுவதிலும் பல துறைகளில் இப்போது ஏ.ஐ. ஊடுருவிவிட்டது. ஆனால் தீட்டிய மரத்தையே பதம் பார்க்கும் கத்தி போல ஏ.ஐ.யை உருவாக்கிய தகவல் தொழில்நுட்பத்துறையையே அதாவது ஐ.டி. தொழிலையே இப்போது அசைத்துவிட்டது. ஏ.ஐ. தொழில்நுட்பம் பல துறைகளில் மனிதர்கள் செய்யும் பணிகளை செய்ய தொடங்கினாலும், ஐ.டி. துறையில் மிக ஆழமாக காலூன்றிவிட்டது. இதன் காரணமாக பல மென்பொருள் நிறுவனங்களில் ஆள்குறைப்பு தொடங்கிவிட்டது.
என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து முடிக்கும் எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துக்கொண்டு இருந்த டாடா கன்சல்டன்சி சேவைகள் என்ற டி.சி.எஸ். நிறுவனத்தில் இப்போது ஒரே நேரத்தில் 12 ஆயிரத்து 260 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் இது 2 சதவீதம்தான் என்றாலும், இவ்வளவு ஊழியர்களுக்கு பணி இழப்பு என்பது பெரிய பாதிப்பாகும். டி.சி.எஸ். உடன் இது நின்றுவிடவில்லை. மைக்ரோசாப்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலை பறிக்கப்பட்டுள்ளது. இண்டெல் நிறுவனத்தில் 24 ஆயிரம் பேர், ஐ.பி.எம்.மில் 8 ஆயிரம் பேர், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் 4 ஆயிரம் பேர் உள்ளிட்ட வேறு சில நிறுவனங்களிலும் ஆள்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல். போன்ற பல நிறுவனங்களில் புதிதாக வேலைக்கு ஆட்கள் சேர்க்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆள்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோர் நடுத்தர மற்றும் அதிக அனுபவம் கொண்டவர்கள். இவர்கள் செயற்கை நுண்ணறிவில் தங்களுக்கு திறமையை உருவாக்கிக்கொள்ளவில்லை என்பதே காரணம். ஆக இப்போது வேலையில் இருப்பவர்களும், செயற்கை நுண்ணறிவில் திறமையை வளர்த்துக்கொண்டால் மட்டுமே வேலையை தக்க வைத்துக்கொள்ளமுடியும். இந்த ஆள்குறைப்பு என்பது ஐ.டி. நிறுவனங்களோடு நின்றுவிடாமல் வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்பட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் அனைத்து துறைகளிலும் தன் ஆட்டத்தை தொடங்கும் வாய்ப்பு இருக்கிறது. செயற்கை நுண்ணறிவுதான் எதிர்காலம் என்ற வகையில் இப்போது அனைத்து படிப்புகளிலும் செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு நல்ல கிராக்கி இருக்கிறது. கம்ப்யூட்டரை பயன்படுத்த எப்படி எல்லோரும் கற்றுக்கொண்டார்களோ அதுபோல செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கும் அனைவரும் கற்றுக்கொண்டால்தான் இனி எதிர்காலம் என்பதை புரிந்துகொண்டு அதற்கான முயற்சிகளை தொடங்கவேண்டும்.






