வருது... வருது... வடகிழக்கு பருவமழை வருது...

அடுத்த தென்மேற்கு பருவமழை வரை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, மழைநீரை சேமித்து வைப்பதற்கான ஏற்பாடுகளில் நீர் வளத்துறை முழுமையாக இறங்க வேண்டும்.
எந்த மாநிலம் என்றாலும் சரி, அங்கு மழைவளம் மிகுந்தால்தான் நீர்வளம் பெருகும், விவசாயம் செழிக்கும். குடிநீர் பற்றாக்குறை வரவே வராது. ஆக மாநிலத்தின் செழிப்புக்கு வானில் இருந்து பெய்யும் அருட்கொடையான மழைத்துளிதான் பெரும் காரணமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தளவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற 2 பருவமழைகள்தான் தண்ணீர் வளத்துக்கு முக்கிய காரணிகளாக அமைந்திருக்கின்றன. தென்மேற்கு பருவமழை, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் தான் அதிகளவில் பெய்கிறது. இது ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் 2-வது வாரம் நிறைவுபெறும். இந்த ஆண்டு வழக்கமாக ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை மே 27-ந்தேதியே கேரளாவில் தொடங்கியது. அனேகமாக அக்டோபர் 12-ந்தேதிக்கு பிறகு மேலும் ஒரு வாரகாலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பெய்யக்கூடிய மழை அளவைதான் வானிலை ஆய்வு மையம் கணக்கில் கொள்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் சராசரி அளவான 32.8 செ.மீ. என்பதையொட்டி, அதாவது 32.5 செ.மீ. மழை பதிவாகியது. இது இயல்பான மழைப்பதிவு ஆகும். இதில் திருநெல்வேலியில் இயல்பைவிட 250 சதவீதம் அதிகமாகவும், தலைநகராம் சென்னையில் இயல்பைவிட 29 சதவீதம் அதிகமாகவும் மழை கொட்டியிருக்கிறது. அதேசமயம், விருதுநகர், திருப்பூர், ராமநாதபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் சராசரியைவிட மிக குறைவாகவே மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து தமிழ்நாட்டின் ஆண்டு மழைப்பொழிவில் அதிக மழையை கொடுக்கக்கூடிய வடகிழக்கு பருவமழை இந்த மாதம் முதல் பெய்ய இருக்கிறது. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான இந்த பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் சராசரியாக 44.2 செ.மீ. மழை பதிவாகும். இந்த ஆண்டு 50 செ.மீ. வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயல்புக்கு அதிகமான மழைப்பொழிவு என்பது மகிழ்ச்சியான செய்தி. இதுமட்டுமல்லாமல், வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் அவ்வப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் தாழ்வுமண்டலம் உருவாகி, அதன் காரணமாகவும் நல்லமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழையும் இயல்பைவிட அதிகமாக பெய்யும் என்று கணக்கிடப்பட்டு இருப்பதால் தண்ணீர் பஞ்சத்துக்கும் வாய்ப்பு இருக்காது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் கடைசி வரை தமிழ்நாட்டில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்பதால், “மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்’’ என்று விவசாயிகள் ஆனந்த பெருக்கோடு மழையை எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர். ஆனால் இப்போது பெய்யும் மழைதான் கோடைகாலத்தையும் சமாளித்து, அடுத்த தென்மேற்கு பருவமழை வரை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதால், மழைநீரை சேமித்து வைப்பதற்கான ஏற்பாடுகளில் நீர் வளத்துறை முழுமையாக இறங்க வேண்டும். எல்லா ஊர்களிலும் குளங்கள், ஏரிகள் இருப்பதால், அதில் கொண்டு போய் மழைநீரை நிரப்புவதற்கான வடிகால்கள் தூர்வாரப்படும் பணியை மேலும் வேகப்படுத்த வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் மழையால் 2015-ல் ஏற்பட்ட பெரும் சேதத்தை பாடமாக கொண்டு உள்ளாட்சி அமைப்புகள் மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும். மொத்தத்தில் வருண பகவானின் கருணை இருக்கிறது. மழை பெய்ய போகிறது. அதனால் சேதம் ஏற்படாமல் தவிர்த்து, வீணாகாமல் சேமித்து வைக்க வேண்டிய பொறுப்பு அரசிடம்தான் இருக்கிறது.






