இந்த முடிவு எல்லா துறைக்கும் வேண்டும்


இந்த முடிவு எல்லா துறைக்கும் வேண்டும்
x
தினத்தந்தி 27 March 2025 3:55 AM IST (Updated: 27 March 2025 6:01 AM IST)
t-max-icont-min-icon

மொழிப்பிரச்சினை என்பது ஒரு தேன்கூடு போன்றது

மொழிப்பிரச்சினை என்பது ஒரு தேன்கூடு போன்றது. அதில் கைவைத்தால் ஆயிரம் தேனீக்கள் ஒன்றாக பறந்துவந்து கொட்டுவதைப்போன்ற நிலைமை ஏற்படும். மொழி மீது பற்று இருந்தால் தவறில்லை. ஆனால் அதுவே வெறியாக மாறும்போது, அதனால் ஏற்படும் நடவடிக்கைகளை மற்றவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு மொழியை கற்பதில் தவறேயில்லை. ஆனால் அதை நீ கண்டிப்பாக படித்தேயாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் போதுதான் எதிர்ப்பு அலையாக கிளம்புகிறது.

தமிழ்நாட்டில்கூட இந்தி பிரசார சபையில் இந்தி படித்து பல மாணவர்கள் குறிப்பாக, பெண்கள் 8 தேர்வுகளையும் எழுதி தேர்ச்சி பெற்று வருகிறார்கள். ஆனால் அதை பள்ளிக்கூடங்களில் கட்டாய பாடமொழியாக திணிக்கும்போதுதான் எதிர்ப்பு வருகிறது. இந்தி எதிர்ப்பு என்று 1930-களில் ஏற்றிவைத்த தீப்பொறி இன்றும் கொழுந்துவிட்டு எரிகிறது. அதன் எதிரொலியாகத்தான் மும்மொழி கொள்கையை உள்ளடக்கியுள்ள புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் கட்சிகள்கூட இந்தி மொழியை நாங்கள் எதிர்க்கவில்லை. அதை திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம் என்று கூறுகின்றன.

மத்திய அரசாங்க தேர்வுகளில் குறிப்பாக, ரெயில்வே, தபால், வங்கி துறைகளில் இந்தி படித்தவர்கள் மட்டுமே அதிகளவில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டில்கூட இந்த துறைகளில் வடஇந்தியர்கள் நிறையபேர் வேலை பார்ப்பது தமிழ்நாட்டில் வேலை தேடிக்கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு பெரிய மனக்குறையாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதத்துக்கு பதிலளித்த மத்திய மந்திரி அமித்ஷா 2 மணிநேர பேச்சில் கூறிய கருத்துகள், ஒரு புதிய பாதையில் மத்திய அரசாங்கம் செல்ல தொடங்கியதை காட்டுகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள அலுவல்மொழி துறையின்கீழ் இந்திய மொழிகளுக்கான துறை என்று ஒருபுதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறிய அமித்ஷா, நான் இப்போது ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன் என்று கூறிவிட்டு, உண்மையிலேயே அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு தகவலை வெளியிட்டார். வருகிற டிசம்பர் மாதம் முதல் நானும், என் அலுவலகமும் மக்களுக்கு என்றாலும்சரி, முதல்-மந்திரிகளுக்கு என்றாலும் சரி, மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று எல்லோருக்கும் எழுதும் கடிதம் அவரவர் மொழிகளிலேயே எழுதப்படும் என்றார்.

மத்திய அரசாங்கம் தென்னிந்திய மொழிகள்மீது வெறுப்புணர்வு கொண்டு இருக்கிறது என்று ஒரு உணர்வை மக்களிடம் விதைக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இது எப்படி சாத்தியமாகும்?. நாங்களும் மாநிலங்களில் இருந்துதான் வந்து இருக்கிறோம். நான் குஜராத்தில் இருந்து வந்தவன். நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறார். பிறகு எப்படி இதுபோல பேசுகிறார்கள்? என்று குறிப்பிட்டார். மத்திய உள்துறை மந்திரியின் இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கதும், அனைவருக்கும் பயனளிக்கும் நடைமுறையுமாகும்.

உள்துறை அமைச்சகத்தில் இருந்து வரும் தகவல் தொடர்புகள் அவரவர் மொழியில்தான் வரும் என்பதுபோல, மத்திய அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் இருந்து வரும் கடிதங்கள், தகவல்களும் அந்தந்த மாநில மொழிகளிலேயே வந்தால் சாதாரண பாமரனுக்கும் தெளிவாக தெரியும். மத்திய அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களும் எல்லோருக்கும் போய்ச்சேரும். இதுபோல மத்திய அரசாங்கத்தின் அனைத்து தேர்வுகளையும் மாநில மொழிகளிலும் நடத்தினால் நிச்சயமாக ஒரு நல்லிணக்கம் உருவாகும். எந்த பிரிவினை உணர்வும் வராது.

1 More update

Next Story